அமேசான் நிறுவனத்தின் தயாரிப்பான 'ஃபேமிலி மேன்' வெப் சீரிஸின் இரண்டாவது சீசன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்தத் தகவலை இயக்குநர்கள் ராஜ் நிதிமோரு, க்ரிஷ்ணா டிகி ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.
இந்தத் தகவலோடு ஒரு டீஸர் வீடியோவையும் பகிர்ந்துள்ளனர். அமேசான் ப்ரைம் பக்கமும் டீஸர் வீடியோவைப் பகிர்ந்து, "இப்போதைக்கு ஸ்ரீகாந்த் அவரது மனைவி குழந்தைகளுடன் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருக்கிறார். அவர் கண்டிப்பாக மீண்டும் வருவார் என்று உறுதியளிக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த இரண்டாவது சீசனில் நடிகை சமந்தா நடிக்கவுள்ளார். அவர் நடிக்கும் முதல் வெப் சீரிஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஆர்வம் தெரிவித்துள்ள சமந்தா, தான் கனவு கண்ட ஒரு கதாபாத்திரத்தை அளித்த இயக்குநர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தலைவன் (மனோஜ் பாஜ்பாய்) ரகசியமாக தேசியப் புலனாய்வு அமைப்புக்கு வேலை செய்வதும், அதில் இருக்கும் சாகசங்களும், இடையில் வரும் குடும்பப் பிரச்சினைகளுமே 'ஃபேமிலி மேன்' தொடரின் கதை.
முதல் சீசனில் நடிகை பிரியாமணி, ஷாரிப் ஹாஷ்மி, நீரஜ் மாதவ், பவன் சோப்ரா, கிஷோர் குமார், குல் பனாக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். செப்டம்பர் 20-ம் தேதி ஸ்ட்ரீமிங்கில் வெளியான இந்தத் தொடர் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது.