விபத்தில் மரணமடைந்த ரசிகரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும்போது, கண்ணீர் விட்டு அழுதார் கார்த்தி.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தம்பி'. டிசம்பர் 20-ம் தேதி வெளியாகியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (நவம்பர் 30) நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சூர்யா, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.
இந்த விழாவுக்கு கார்த்தி மக்கள் நல மன்றத்தின் சென்னை மாவட்ட அமைப்பாளர் வியாசை நித்யா வந்து கொண்டிருந்தார். அவர் அதிகாலையில் உளுந்தூர்பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்தத் தகவல் உடனடியாக கார்த்திக்கு தெரிவிக்கப்பட்டது.
காலை 9 மணியளவில் 'தம்பி' இசை வெளியீட்டு விழா இருந்தாலும், உடனடியாக வியாசை நித்யா வீட்டுக்குச் சென்றார் கார்த்தி. அவரைப் பார்த்ததும் குடும்பத்தினர் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்கள். உடனே கார்த்தியும் கண் கலங்கினார். இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு வீட்டிக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து கிளம்பி 'தம்பி' இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அங்கும் அவருக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினார் கார்த்தி.
ரசிகரின் மரணத்தின்போது கார்த்தி கண் கலங்குவது முதல் முறையல்ல. 2017-ம் ஆண்டு கார்த்தி ரசிகர் மன்றத்தின் திருவண்ணாமலை மாவட்டத் தலைவராக இருந்த ஜீவன் குமார் கார் விபத்தில் மரணமடைந்தார். அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தும்போதும் கார்த்தி கதறி அழுதது நினைவுகூரத்தக்கது.