பாஜகவில் இணைந்தது ஏன் என்று நடிகை நமீதா பத்திரிகையாளர்கள் மத்தியில் விளக்கம் அளித்தார்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நமீதா. திருமணத்துக்குப் பிறகு முக்கியமான கதாபாத்திரங்கள் அமையும் படத்தில் மட்டுமே அவர் நடித்து வருகிறார். 2016-ம் ஆண்டு ஜெயலலிதா திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, அவரது முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும், தேர்தல் பரப்புரையும் மேற்கொண்டார்.
இந்நிலையில் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் சமீபத்தில் கலந்து கொண்டார். அவரைச் சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார் நடிகர் ராதாரவி. திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜே.பி.நட்டா கலந்து கொண்டபோது, அவரைச் சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார் நமீதா. இது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
பாஜகவில் இணைந்தது தொடர்பாகப் பத்திரிகையாளர்கள் மத்தியில் நமீதா பேசும்போது, "தமிழக மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. இறுதியாக அம்மாவின் ஆசியில் பாஜகவில் இணைந்துள்ளேன். பெண்கள் மற்றும் விவசாயிகள் நலனுக்காகப் பாடுபட வேண்டும் என்பது என் மனதில் எப்போதுமே இருக்கிறது. அதோடு சேர்த்து இப்போது விலங்குகள் நலனுக்காகவும் பாடுபடப் போகிறேன்.
நாட்டின் வளர்ச்சி, பெண்கள் நலன், குழந்தைகள், கல்வி உள்ளிட்ட பல விஷயங்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களைப் பிரதமர் மோடி செய்து வருகிறார். மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் சேவை செய்ய வேண்டும் என்றே அரசியல் கட்சிகளில் இணைகிறோம். எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவேன்" என்று பேசினார் நமீதா.