'தளபதி 64' படத்தில் தேதிகள் பிரச்சினை காரணமாக ஆண்டனி வர்கீஸ் விலகவே, அவருக்குப் பதிலாக அர்ஜுன் தாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதன் டெல்லி படப்பிடிப்பு முடிவடைந்து சென்னை திரும்பியுள்ளது படக்குழு. அடுத்தகட்டப் படப்பிடிப்பு சிமோகாவில் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால்,, அங்கு கடுமையாக மழை பெய்து வருவதால் ஆலோசனையில் இறங்கியுள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 'தளபதி 64' என்று அழைத்து வருகிறது படக்குழு. இதில் மாளவிகா மோகன், விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, வி.ஜே.ரம்யா, கெளரி கிஷண் உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இதில் விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்ட காட்சிகளை இனிமேல் தான் காட்சிப்படுத்தவுள்ளது படக்குழு.
இதனிடையே, 'தளபதி 64' படக்குழு கேட்ட தேதிகளை ஆண்டனி வர்கீஸால் ஒதுக்கித் தர இயலவில்லை. இதனால், அர்ஜுன் தாஸை அந்தக் கதாபாத்திரத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். 'கைதி' படத்தில் அர்ஜுன் தாஸின் நடிப்புக்கும், வசன உச்சரிப்புக்கும் பெரும் பாராட்டு கிடைத்தது. இதனால் லோகேஷ் கனகராஜ் அவரை இந்தப் படத்துக்கும் ஒப்பந்தம் செய்துள்ளார். இதனைப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
புத்தாண்டு அன்று படத்தின் பெயருடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு. மேலும், 2020-ம் ஆண்டு கோடை விடுமுறை வெளியீடாக 'தளபதி 64' வெளியாகவுள்ளது.