‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ படத்தில் நடித்து வருகிறார் மதுமிதா.
எழுத்தாளர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘டிக்கிலோனா’. ‘பலூன்’ இயக்குநர் சினிஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை, கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதில், ஹீரோவாக சந்தானம் நடிக்கிறார். அதுவும் மூன்று வேடங்களில். பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், இந்தப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். காமெடியனாக யோகி பாபு நடிக்கிறார். இதன்மூலம் ‘டகால்டி’ படத்தைத் தொடர்ந்து சந்தானம் - யோகி பாபு இருவரும் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கின்றனர்.
அனகா, ஷிரின் ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கும் இந்தப் படத்தில், ஆனந்த் ராஜ், முனீஸ்காந்த், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷா ரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, இட் ஈஸ் பிரசாந்த் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இந்நிலையில், மதுமிதா இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வெளியான புகைப்படத்தை வைத்து, அவர் வக்கீல் வேடத்தில் நடிக்கிறார் எனத் தெரிகிறது. ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
2012-ம் ஆண்டு வெளியான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில், சந்தானம் ஜோடியாக சினிமாவில் அறிமுகமானவர் மதுமிதா. ஆனால், அந்தப் படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை. ‘ராஜா ராணி’ படத்தில் இருவரும் நடித்தாலும், இருவரும் இணைந்து நடிக்கவில்லை.
எனவே, 7 வருடங்களுக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இவர்கள் இணைந்து நடித்த காமெடி காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், இந்தப் படத்திலும் அதை எதிர்பார்க்கலாம்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை, அடுத்த வருடம் (2020) ஏப்ரல் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.