சி.காவேரி மாணிக்கம்
அடாவடி ரவுடி உடலுக்குள் பயந்தாங்கொள்ளி ஆவி புகுந்து கொள்(ல்)வதுதான் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’
பட்டாளம் ஏரியாவில் மிகப்பெரிய டானாகத் திகழ்கிறார் ஆரவ். மார்க்கெட் ராஜா எனும் பெயரைக் கேட்டாலே அமைச்சர் முதற்கொண்டு அத்தனை பேரும் பதறி நடுங்குகின்றனர். ஒவ்வொரு முறையும் கொலை செய்தபிறகு, ஒரு மெழுகுவர்த்தி கொளுத்தி பாவ மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார்.
அவருடைய அம்மா ராதிகா சரத்குமார், பெரம்பூர் பகுதியில் ரவுடியாக இருக்கிறார். ‘என் தாய் என்னுடைய தெய்வம்’ எனத் தன்னுடைய காரில் எழுதி வைத்திருக்கும் ஆரவ், நேரில் ராதிகாவைக் கண்டாலே எரிந்து விழுகிறார். தன்னிடம் பயந்து பதுங்கும் ராதிகாவை, அம்மா என்றுகூட பாராமல் அடித்து அந்தரத்தில் பறக்க விடுகிறார்.
ஆரவ்வின் வீர தீர பராக்கிரமங்களைப் பார்த்து, அவர்மீது காதலில் விழுகிறார் காவ்யா. ஆனால், ஆரவ்வுக்கு அவரைப் பிடிக்கவில்லை. இருந்தாலும், விடாமல் துரத்தி துரத்தி காதலிக்கிறார்.
இந்நிலையில், ஆரவ்வைக் கொல்ல ஓய்வுபெற்ற என்கவுன்ட்டர் போலீஸ் ஒருவரை நியமிக்கிறார் போலீஸ் கமிஷனர். அவர்கள் ஆரவ்வைக் கொல்ல முயற்சிக்கும்போது, காவ்யாவை ஒருதலையாகக் காதலிக்கும் மருத்துவ மாணவர் தவறுதலாகக் குண்டு பாய்ந்து இறந்துவிடுகிறார். உடனே, அந்த மாணவரின் ஆவி ஆரவ் உடலுக்குள் புகுந்து கொள்கிறது.
பயந்த சுபாவம் கொண்ட அந்த மருத்துவ மாணவரின் ஆவி ஆரவ் உடலுக்குள் புகுந்ததால், அதிரடி ரவுடியான அவர், பயந்தாங்கொள்ளி போல் ஆகிவிடுகிறார். அதன்பிறகு என்னவாகிறது என்பது மீதிக்கதை.
ஆக்ஷன், பேய், காமெடி, எமோஷன் என நான்கும் கலந்த கலவையாக இருக்கும் இந்தப் படம், எதுவுமே சரியில்லாமல் நான்கும் கெட்டானாக இருக்கிறது. ரோகிணி கதாபாத்திரத்தின் எமோஷன் காட்சிகள் மட்டும்தான் பரவாயில்லை ரகம். காமெடி காட்சிகள், சிரிப்பை வரவழைக்க முயன்று தோற்றுப் போகின்றன.
ரவுடி, பயந்தாங்கொள்ளி என இரண்டு விதமான பரிமாணங்களில் ஜஸ்ட் பாஸ் ஆகிறார் ஆரவ். சண்டைக் காட்சிகளில் கொடுத்த கடின உழைப்பை, நடிப்பிலும் கொடுத்திருக்கலாம். ரவுடி என்றால் முகத்தை வீராப்பாகத்தான் வைத்திருக்க வேண்டும் என நினைத்து, அவர் அவ்வாறு வைக்க முயற்சி செய்திருப்பது சிரிப்பை வரவழைக்கிறது. அவருக்குக் கொடுக்கப்பட்ட பில்டப் காட்சிகள், நம்பகத்தன்மையை ஏற்படுத்தத் தவறி விடுகின்றன.
சுந்தரி பாய் கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமாரைப் பார்க்கவே அம்சமாக இருக்கிறது. அந்த கெட்டப் ரசிக்க வைக்கும் அளவுக்கு, அவருடைய கதாபாத்திரம் ரசிக்க வைக்கவில்லை என்பதுதான் உண்மை. காது கேட்காத, வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும், மகனை இழந்து பரிதவிக்கும் காட்சிகளில் பரிதாபப்பட வைக்கிறார் ரோகிணி.
ஆரவ் உடனிருக்கும் ஆதித்யா மேனன், சாம்ஸ் இருவரும் கவனிக்க வைக்கின்றனர். நாசர், பிரதீப் ராவத் ஆகியோரும் படத்தில் உள்ளனர். அழகுப் பதுமையாக ‘வந்து போகிறார்’ நிகிஷா படேல். ஹீரோயினாக நடித்துள்ள காவ்யாவுக்கும் பெரிதாக வேலையில்லை.
சைமன் கே கிங் இசையில், ‘தாதா’ தீம் மியூஸிக் மட்டும் மனதில் நிற்கிறது. கே.வி.குகனின் ஒளிப்பதிவு ‘பளிச்’சென இருக்கிறது.
‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தை இயக்கிய சரண், அதிலிருந்து சில காட்சிகளை அப்படியே வைத்துள்ளார். அந்தப்படம் போல காமெடியைப் பிரதானமாக வைத்து எடுத்திருந்தால் கூட ரசிக்கும் வகையில் இருந்திருக்கும். ஆனால், இதில் காமெடி செய்கிறேன் பேர்வழி என்று மொக்கை போடுகிறார்கள். கொஞ்சம்கூட லாஜிக்கே இல்லாத காட்சிகள், அசதியை வரவழைக்கின்றன.
வார்டு பாய் அளவுக்குத்தான் இருக்கிறது இந்த ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’