ஜீ தமிழ் சேனலில் ‘சூப்பர் மாம்’ சீசன் - 2 ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. முதல் சீசன் போலவே, இதிலும் தொகுப்பாளினி அர்ச்சனாவோடு இணைந்து, அவரது மகள் ஷாராவும் கலக்கத் தொடங்கியுள்ளார்.
‘‘முதல் சீசனில் ஒரு அம்மாவாக இருந்து ஷாராவுக்கு தொகுப்பாளினிக்கான வித்தையை கற்றுக்கொடுக்கும் பயிற்சியாளராக இருந்தேன். இப்போது எங்கள் இருவருக்குமே போட்டி இருக்கும் அளவுக்கு என் மகள் வளர்ந்து நிற்கிறார். பெருமையாக இருக்கிறது. ‘சூப்பர் மாம்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் குழந்தைகளிடம் என் மகள் வெளிப்படுத்தும் அன்பை பார்க்கும்போது, அவளுக்கு சரியான தாயாகவும், தோழியாகவும் இருப்பதாகவே உணர்கிறேன்.
பிரபலம், புகழ், பணம் ஆகிய அனைத்தும் இனி என் மகளையும் தொற்றும். அது எதுவும் அவளது தலைக்கு ஏறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். ஏனென்றால் என் அம்மா என்னை அப்படித்தான் வளர்த்தார். அடுத்த தலைமுறை பெண்ணாக வளரும் என் மகளும் அவ்வாறே இருக்க வேண்டும். அதை இந்த நிகழ்ச்சி வழியே நிறைய உணர முடிகிறது.
ஒரு கப்பலின் கேப்டன்போல, இந்நிகழ்ச்சியை கவுசிக் அற்புதமாக இயக்குகிறார். அதில் பயணிப்பது புதுவித அனுபவமாகவே இருக்கிறது’’ என்கிறார் அர்ச்சனா.