தமிழ் சினிமா

‘‘ஹைதராபாத்தை பாதுகாப்பான நகரம் என எண்ணியிருந்தேன்’’- எரித்துக் கொல்லப்பட்ட பிரியங்கா ரெட்டி: கீர்த்தி சுரேஷ் ஆதங்கம்

செய்திப்பிரிவு

ஹைதராபாத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட பிரியங்கா ரெட்டி மறைவுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் விலங்குகள் நல மருத்துவரான பிரியங்கா ரெட்டி காணாமல் போனதாகப் பெற்றோர் போலீஸில் புகார் அளித்த நிலையில் அவரது உடல் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் குடும்பத்தினர் பேரதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் செய்தி இணைய வாசிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. #RIPPriyankaReddy, #JusticeForPriyankaReddy ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டர் தளத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது. மேலும், பிரியங்கா ரெட்டி மரணத்துக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் தங்களுடைய இரங்கலையும், கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

பிரியங்கா ரெட்டி மரணம் தொடர்பாக நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கடிதத்தில், "டாக்டர் பிரியங்கா ரெட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார் என்ற செய்தி என்னை நிலைகுலையச் செய்துவிட்டது. மனம் நொறுங்கிவிட்டது.

ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது. பேச வார்த்தைகள் வரவில்லை. யார் மீது பழி சொல்வது என்பதும் தெரியவில்லை. ஹைதராபாத்தை நான் இதுவரை மிக மிக பாதுகாப்பான நகரம் என எண்ணியிருந்தேன். அங்குதான் இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது. நம் தேசம் எப்போதுதான் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக அமையும்.

கொடூர கொலையாளிகள் கைது செய்யப்பட வேண்டும். மனமார்ந்த இரங்கலை அந்தக் குடும்பத்துக்கு உரித்தாக்குகிறேன். இதனைத் தாங்கும் சக்தியை இறைவன் தான் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். நான் கர்மாவின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்" என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT