இயக்குநர் ஷங்கர் மாதிரி என்னால் படங்கள் பண்ண முடியாது என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
திரையுலகில் இயக்குநராக ஷங்கர் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனைக் கொண்டாடும் வகையில், சில மாதங்களுக்கு முன்பு இயக்குநர் மிஷ்கின் தனது வீட்டில் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். அதில் மணிரத்னம், வசந்தபாலன், பாலாஜி சக்திவேல், லிங்குசாமி, கெளதம் மேனன், பாண்டிராஜ் உள்ளிட்ட தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் பலரும் கலந்துகொண்டு ஷங்கரைக் கொண்டாடினார்கள்.
ஷங்கருக்காக மிஷ்கின் விழா எடுத்தது தமிழ்த் திரையுலகில் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்த விழா எடுத்தது ஏன் என்று இயக்குநர் மிஷ்கினிடம் கேட்ட போது, "அவரை ரொம்பப் பிடிக்கும். என்னோட பெரியப்பா அவர். அவரது படங்களை நான் பார்ப்பதில்லை. ரொம்ப இனிமையான மனிதர். அவரது படங்களும், எனது படங்களும் வெவ்வேறு விஷயங்களைச் சொல்கின்றன.
என் படங்கள் அவருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அது உண்மையென்றால் ரொம்பவே சந்தோஷப்படுவேன். அவரை மாதிரி என்னால் படங்கள் பண்ண முடியாது. இருவரும் வாழ்க்கையைப் பார்க்கும் விதம் வேறு. கலையின் மீது கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.
மணி சாரையும் அப்படித்தான் பார்க்கிறேன். என்னுடைய சிறு தகப்பன் அவர். அனைவருமே வெவ்வேறு பாதையில் இயங்குகிறோம். அப்படி இருப்பதால்தான் அழகாக இருக்கிறது. 100 ஆண்டுகள் கழித்து எது நல்ல படம் என்று வரலாறு சொல்லும். இப்போதே சொல்லிக்கொள்வதில் பிரயோஜனமில்லை.
மூத்தவர் ஷங்கரைக் கொண்டாடினேன். மணி சாருக்கு என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். அந்தக் கொண்டாட்டம் எல்லாம் எங்களுக்கு தீபாவளி மாதிரி. ஷங்கர் 25 விழா என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அந்த இரவை மறக்க முடியாது. அவருக்காக ஒரு பாடல் எழுதி, கம்போஸ் பண்ணிப் பாடினேன். படங்கள் வெவ்வேறாக இருந்தாலும், எங்களுக்குள் பரிசுத்தமான அன்பு இருக்கிறது. 6 மாதத்துக்கு ஒருவரைக் கொண்டாட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்" என்று தெரிவித்தார் இயக்குநர் மிஷ்கின்.