தமிழ் சினிமா

யூ டியூப் சேனலில் 'சும்மா கிழி' பாடல் சாதனை: அனிருத் நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

24 மணிநேரத்தில் அதிக பார்வைகளைப் பெற்ற தமிழ்ப் பாடல் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது 'சும்மா கிழி' பாடல்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'தர்பார்'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி முதன்முறையாக நடித்துள்ளார். இதில் நயன்தாரா, நிவேதா தாமஸ், பிரதீக் பார்பர், சுனில் ஷெட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 2020-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது படக்குழு.

இதில் 'சும்மா கிழி' என்று எஸ்.பி.பி பாடிய முதல் பாடல் நேற்று (நவம்பர் 27) மாலை 6 மணியளவில் யூ டியூப் சேனலில் வெளியானது. சில காலங்களுக்கு முன்பு வந்த ரஜினி படங்களில் வரும் முதல் பாடலைப் போல 'சும்மா கிழி' பாடல் இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 1 மணிநேரத்தில் 1 மில்லியன் பார்வைகளைக் கடந்தது.

தற்போது தமிழ்த் திரையுலகில் 24 மணிநேரத்தில் அதிக பார்வைகளைக் கடந்த பாடலின் லிரிக்கல் வீடியோ என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 24 மணிநேரத்தில் 8 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது 'சும்மா கிழி' பாடல்.

இது தொடர்பாக இசையமைப்பாளர் அனிருத் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், "இது தலைவரின் அன்பு சாம்ராஜ்ஜியம். 24 மணிநேரத்தில் 8 மில்லியன் பார்வைகளைக் கடந்து, அதிகம் பேர் பார்த்த தமிழ்ப் பாடல் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT