இசையமைக்கும் படங்களின் நாயகன் யார் எனப் பார்ப்பதில்லை என்று இசையமைப்பாளர் சாம் சி.எஸ். தெரிவித்துள்ளார்.
'தி போயட் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜடா'. புதுமுக இயக்குநர் குமரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கதிர், ரோஷினி பிரகாஷ், சுவாஸ்திகா, லிங்கேஷ், ஏ.பி.ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிசம்பர் 6-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (டிசம்பர் 27) நடைபெற்றது.
இந்த விழாவில் படக்குழுவினருடன் 'விக்ரம் வேதா' இயக்குநர் புஷ்கர் - காயத்ரி சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பேசும்போது, "நான் இசையமைக்கும் படங்களின் நாயகன் யார் என்று பார்ப்பதில்லை. படத்தின் கதை என்ன என்பதில் கவனமாக இருப்பேன்.
'கைதி ', 'ஜடா' படங்கள் எல்லாம் இசைக்கே வேலையில்லாத வகையிலான படங்கள்தான். அதாவது இப்படியான படங்களில் எங்கள் வேலை மிகச் சுலபம் தான். கதிர் இப்படத்தின் நாயகன் அல்ல, கதையின் நாயகன். 'ஜடா'வாக வாழ்ந்திருக்கிறார்.
படம் விட்டு வெளிவரும்போது படத்தில் நடித்துள்ள அனைத்துக் கதாபாத்திரங்களும் மனதில் பதிந்துவிடுவார்கள். எந்தப் படத்துக்கு இசையமைத்தாலும், கதையைப் படித்து விட்டுதான் இசையமைப்பேன். அப்படி 'ஜடா' கதையைப் படித்தபோதே மிகவும் பிடித்துவிட்டது.
எனக்கு வரும் படங்கள் அனைத்துமே பின்னணி இசைக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள்தான். வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் வெளியாகும் சாதாரண படங்களின் வரிசையில் 'ஜடா' இருக்காது. மிகச்சிறப்பாக இருக்கும்" என்று தெரிவித்தார் சாம் சி.எஸ்.