'ஜடா' வழக்கமான படம் அல்ல என்று அந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கதிர் பேசினார்.
'தி போயட் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜடா'. புதுமுக இயக்குநர் குமரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கதிர், ரோஷினி பிரகாஷ், சுவாஸ்திகா, லிங்கேஷ், ஏ.பி.ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிசம்பர் 6-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (டிசம்பர் 27) நடைபெற்றது.
இந்த விழாவில் படக்குழுவினருடன் 'விக்ரம் வேதா' இயக்குநர் புஷ்கர் - காயத்ரி சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.
இதில் நாயகன் கதிர் பேசும்போது, "குமரன் அற்புதமான இயக்குநர் என்பதைத் தாண்டி துளியும் ஈகோ இல்லாதவர்.அனைவரும் கொடுக்கும் விஷயங்களையும் வாங்கி சிறப்பாகச் செய்வார். இந்த மாதிரி ஒரு படக்குழு அமைவது முக்கியம்.
சாம்.சி எஸ். இசை படத்திற்கு முக்கியமாக அமைந்துள்ளது. 'ஜடா' வழக்கமான படம் கிடையாது. படத்தில் நிறைய சுவாரஸ்யங்கள், எமோஷன் காட்சிகள் இருக்கும். அதுதான் எனக்கு மிகவும் பிடித்தது.
உலகத்தரம் வாய்ந்த கால்பந்து விளையாட்டுக்கும், வீதிகளில் விளையாடும் கால்பந்து விளையாட்டுக்கும் உள்ள வித்தியாசங்கள் இந்தப் படத்தில் இருக்கும். 'பிகில்' படத்தில் கால்பந்து விளையாட்டு பற்றி சொல்லப்பட்டது. இந்தப் படமும் கால்பந்து விளையாட்டா? என்று நிறைய பேர் கேட்கிறார்கள். அது வேறு, இது வேறு. சாம்.சி.எஸ். இசையைப் பெரிய திரையில் படத்தோடு கேட்கும்போது பிரமிப்பாக இருக்கிறது" என்று பேசினார் கதிர்.