நான் ஒரு வேண்டாத நபர் என்று 1980-களின் நடிகர்கள் சந்திப்பு தொடர்பாக நடிகர் பிரதாப் போத்தன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
1980-களின் பிரபல நடிகர்கள் பலரும் வருடந்தோறும் சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த ஆண்டின் சந்திப்பு ஹைதராபாத்தில் சீரஞ்சிவி தலைமையில் நடைபெற்றது. இதற்காகப் பல முன்னணி நடிகர்களும் ஒன்று கூடினார்கள். இந்தச் சந்திப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
இதில் சீரஞ்சிவி, மோகன்லால், நாகார்ஜுனா, கே.பாக்யராஜ், பிரபு, ஜெயராம், சுரேஷ், ரகுமான், குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், வெங்கடேஷ், ஜெகபதி பாபு, சுமன், ஷோபனா, நதியா, ராதா, அமலா, ரேவதி, ரமேஷ் அரவிந்த், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஆனால், நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில், 1980-களின் நடிகர்கள் சந்திப்பு குறித்து பிரதாப் போத்தன் தனது ட்விட்டர் பதிவில், "நான் 80-களின் நட்சத்திரங்களுக்கு நடுவில் ஒரு வேண்டாத நபர். ஒரு வேளை நான் மோசமான நடிகராக, இயக்குநராக இருக்கலாம். அதனால்தான் அவர்கள் என்னை சந்திப்புக்கு அழைக்காமல் இருந்திருக்கலாம்.
நான் வருத்தப்படுகிறேன். என்னவென்று சொல்வது. எனது திரைத்துறை தொழில் வாழ்க்கைக்கு அர்த்தமில்லை. சிலருக்கு உங்களைப் பிடிக்கலாம், சிலர் வெறுக்கலாம். ஆனால் வாழ்க்கை தொடர்ந்து செல்லும்" என்று தெரிவித்துள்ளார் பிரதாப் போத்தன்.