தமிழ் சினிமா

''அய்யோ... சூப்பர் பா... தியேட்டர்ல கிழிதான்''- 'தர்பார்' பாடலுக்கு ரஜினி வாழ்த்து

செய்திப்பிரிவு

’சும்மா கிழி’ பாடலின் தொடக்கத்தையும் முடிவையும் பாடிவிட்டு, முழுப் பாட்டையும் கேட்டுவிட்டு அனிருத்தைப் பாராட்டியுள்ளார் ரஜினி.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தர்பார்’. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்தின் தீம் மியூசிக்குடன் கூடிய மோஷன் போஸ்டர் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இந்தப் படத்தின் 'சும்மா கிழி' என்ற பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எஸ்.பி.பி பாடியுள்ள இந்தப் பாடலின் வரிகளை விவேக் எழுதியுள்ளார்.

இந்தப் பாடலின் தொடக்கமான 'சும்மா கிழி' என்ற வார்த்தை முதலிலும், பாடலின் இறுதியிலும் ரஜினியின் குரலில் இடம் பெற்றுள்ளது. மேலும், முழுமையாகப் பாடலைக் கேட்டு கை தட்டி "சூப்பர் பா... அய்யோ.. தியேட்டர்ல கிழிதான்" என்று அனிருத்தை ரஜினி பாராட்டுவதும், பாடலின் இறுதியில் இடம் பெற்றுள்ளது.

மேலும், சில காலங்களுக்கு முன்பு வந்த ரஜினி படங்களில் வரும் முதல் பாடலைப் போல 'சும்மா கிழி' பாடல் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 1 மணிநேரத்தில் 1 மில்லியன் பார்வைகளைக் கடந்துவிட்டதாக, டிவோ நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

இந்தப் பாடலைப் பற்றிய ரசிகர்களின் தொடர் பதிவுகளால், ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் #ChummaKizhi மற்றும் #DarbarFirstSingleBlastToday ஆகிய ஹேஷ்டேகுகள் முதல் இரண்டு இடத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்தப் பாடலுக்கு சிவகார்த்திகேயன், லாரன்ஸ் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் அனிருத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

நயன்தாரா, நிவேதா தாமஸ், பிரதீக் பார்பர், சுனில் ஷெட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 2020-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது.

SCROLL FOR NEXT