யோகி பாபுவுடன் திருமணம் என்று வெளியான செய்திக்கு சபீதா ராய் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணி காமெடியனாக வலம் வருபவர் யோகி பாபு. தனக்கு தீவிரமாகப் பெண் பார்த்து வருவதாக, யோகி பாபு பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கடந்த சில நாட்களாக அவர் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் இவர் தான் என்று செய்தி வெளியாகி வந்தது. அவர் யாரென்றால் நடிகை சபீதா ராய். படப்பிடிப்பின்போது யோகி பாபுவுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை வைத்து இந்தச் செய்தியை வெளியிட்டனர். இந்தச் செய்தி வைரலாகவே, யோகி பாபு இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.
ஆனால், சபீதா ராய் இந்தச் செய்தி தொடர்பாக எந்தவொரு மறுப்புமே தெரிவிக்காமல் இருந்தார். இதனால், பலரும் அவரிடம் கேள்வி எழுப்பியபடியே இருந்துள்ளனர். தற்போது இந்தச் செய்தி தொடர்பாகத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை சபீதா ராய் வெளியிட்டுள்ளார்.
அதில் சபீதா ராய், "கடந்த 2 நாட்களாக என்னோட பெயரும், காமெடி நடிகர் யோகி பாபுவின் பெயரையும் பயங்கர ட்ரெண்டாக, தவறான செய்தியை வைத்து ஓடிக் கொண்டிருக்கிறது. உங்கள் அனைவருக்கும் தெரியும். யோகி பாபு திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண் என்று சொன்னது வேறு யாருமில்லை நான்தான்.
இதற்கு சிரிப்பதா, அழுவதா, கோபப்படுவதா எனத் தெரியவில்லை. இந்தச் செய்தி தொடர்பாக யோகி பாபு நல்லபடியாக மறுப்பு தெரிவித்துவிட்டார். பலரும் நீங்கள் ஏன் இன்னும் எதுவும் சொல்லவில்லை எனப் பலரும் கேட்டுக் கொண்டிருப்பதால்தான் இந்த வீடியோ. ஆமாம், திருமணம் தொடர்பான செய்தி முற்றிலும் பொய்தான்.
2017-ம் ஆண்டு 'கன்னி ராசி' படத்தில்தான் அவரோடு இணைந்து நடித்தேன். அந்தப் படத்தின்போது அவரோடு செல்ஃபி தான் அது. எனக்கு யோகி பாபுவை நடிகராக, காமெடியனாக ரொம்பப் பிடிக்கும். எப்படி அந்தப் புகைப்படம் வெளியாகி, என்னைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் எனச் செய்தி வெளியிட்டார்கள் எனத் தெரியவில்லை.
அதைத் தொடர்ந்து அவருடன் 3 படங்களில் நடித்துள்ளேன். இந்தத் தவறான செய்தியை யாரும் நம்ப வேண்டாம். அவர் ஒரு நல்ல நடிகர். கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்துள்ளார். இப்படிப்பட்ட தவறான செய்திக்கு மக்கள் இவ்வளவு முக்கியத்துவம் அளிப்பது வேதனையாகவுள்ளது" என்று தெரிவித்துள்ளார் சபீதா ராய்.