தமிழ் சினிமா

பாக்யராஜின் சர்ச்சைப் பேச்சு: சின்மயி காட்டம்

செய்திப்பிரிவு

'கருத்துக்களை பதிவுசெய்' இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாக்யராஜின் சர்ச்சைப் பேச்சுக்கு சின்மயி காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

ஆர்.பி.எம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாராகியுள்ள படம் 'கருத்துக்களை பதிவுசெய்'. முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் 25-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் பாக்யராஜ், எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும் போது, "ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது என்பது பழமொழி. அதை படத்தில் ஜாலியாகச் சொல்லியிருப்போம். ஆனால், அது உண்மை தான். பெண்கள் இடம் கொடுக்காமல் தவறு நடக்க வழி இல்லை. பெண்கள் ஜாக்கிரதையாக இருந்தால் சரியாக இருக்கும்.

ஆண்களை மட்டுமே குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. பொள்ளாச்சியில் நடந்த தவறுக்கு ஆண்கள் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. பெண்ணின் பலவீனத்தை அவன் உபயோகப்படுத்திக் கொண்டான். அவன் செய்தது தவறு என்றால், அந்த வாய்ப்பை உண்டாக்கிக் கொடுத்ததும் தவறு தான்” என்று பேசினார்.

இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது. இதற்கு பல்வேறு பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாக்யராஜின் இந்தக் கருத்துக்கு சின்மயி தனது ட்விட்டர் பதிவில், "பாலியல் பலாத்காரத்துக்குப் பெண்கள் மீது பழிபோடாதீர்கள் என அதிகாரத்தில் இருக்கும் ஆண்களிடம் சொல்லிச் சொல்லியே சோர்வாகிறது. ஊசி நூல் / முள் சேலை எல்லாம் நிறைய முறை சொல்லி அடித்துத் துவைத்தாகிவிட்டது.

இப்படி நீடித்திருக்கும் சிந்தனையால் பல பெண்கள் இறந்து போகின்றனர். துறையில் இருக்கும் மூத்தவர்கள் பாலியல் பலாத்காரத்துக்குப் பெண்களைப் பழி சொன்னபோது" என்று தெரிவித்து பாக்யராஜ் பேசிய வீடியோ பதிவைப் பகிர்ந்துள்ளார்.

SCROLL FOR NEXT