தமிழ் சினிமா

அப்பா - அம்மாவின் புத்தக வெளியீட்டு விழா: ஜெயம் ரவி உற்சாகம்

செய்திப்பிரிவு

தனது அப்பா - அம்மாவின் புத்தக வெளியீட்டு விழா குறித்த உற்சாகத்தைப் பகிர்ந்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி.

தென்னிந்தியத் திரையுலகின் பிரபலமான எடிட்டர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பல துறைகளில் பணிபுரிந்து வருபவர் எடிட்டர் மோகன். 50 ஆண்டுகளுக்கும் மேலான தனது திரையுலக அனுபவங்களைத் தொகுத்து 'தனிமனிதன்' என்ற புத்தகம் எழுதியுள்ளார். அவரது துணைவியார் வரலட்சுமி மோகன் திருக்குறள் போதிக்கும் அறம் மற்ற அனைத்து இலக்கியத்திலும் நிறைந்திருப்பதை ஆராய்ந்து அதை இன்றைய தலைமுறைக்குப் பயன் தரும் வகையில் 'வேலியற்ற வேதம்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 3-ம் தேதி முன்னணி திரையுலகப் பிரபலங்கள் முன்னிலையில் வெளியிடப்படவுள்ளது.

தனது பெற்றோர் எழுதியுள்ள புத்தகங்கள் வெளியாகவுள்ளது குறித்து ஜெயம் ரவி, "நான் நடிகனாக, இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தேன். ஆனால் எடிட்டர் ஆகிவிட்டேன். அதனால், நீங்கள் இருவரும் எனது கனவான இயக்குநர், நடிகர் ஆனதே எனக்குப் போதும் என்பார் அப்பா. ஓட்டப் பந்தயத்தில் நாலு சுற்று ஓடினால்தான் வெற்றி கிடைக்கும் என்றால் அதில் நாலில் மூன்று சுற்றை அவரே கஷ்டப்பட்டு ஓடிவிட்டு, ஜெயிக்கிற இறுதிச்சுற்றை மட்டும் தான் எங்களிடம் தந்துள்ளார். அதை நாங்கள் பொறுப்பாகச் செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை.

மற்றவர்களும் அவரது இந்த அனுபவங்களைத் தெரிந்து கொள்ளும்போது அவர்களுக்கு உதவியாக இருக்கும். அம்மாவைப் பொறுத்தவரை காந்திகிராமத்தில் படித்தவர். அவரைப் பார்க்கும் போது காந்தியைப் பார்த்த மாதிரியே இருக்கும். காந்தியின் நல்ல குணங்கள் அனைத்தையும் அம்மாவிடம் பார்த்து வளர்ந்திருக்கிறேன். அதை எங்களுக்குச் சொல்லிக்கொடுத்து வளர்த்திருக்கிறார். அம்மா வெகுளி நிறைய பேரிடம் ஏமாந்து போயிருக்கிறார்.

இப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்தது வளர்ந்தது மிகப்பெரிய வரப்பிரசாதம். அவங்களுக்கு கைமாறு எதுவும் செய்ய முடியாது. அப்படி சொன்னால் அது பொய். அப்படிபட்டவங்களுக்கு இப்படி ஒரு விழா எடுக்குறது எங்க வாழ்வில் மறக்க முடியாத நாளாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார் ஜெயம் ரவி.

SCROLL FOR NEXT