தமிழ் சினிமா

ஒரே வருடத்தில் டி.ஆருக்கு ரெண்டு வெற்றி! ; மணிவண்ணன், கே.ரங்கராஜ், ராம.நாராயணன் படங்களும் செம ஹிட்டு! 

செய்திப்பிரிவு

வி.ராம்ஜி

எண்பதுகளை தமிழ் சினிமாவின் பொற்காலம் என்பார்கள். 1983-ம் ஆண்டு, தமிழ் சினிமாவில் எப்பேர்ப்பட்ட படங்களெல்லாம் ஓடின என்று பார்த்தால் சுவாரஸ்யத்துக்குக் குறைவில்லை.


அந்த வருடத்தில், ‘அடுத்த வாரிசு’, ‘துடிக்கும் கரங்கள்’, ‘தாய்வீடு’, ‘பாயும்புலி’, ‘சிகப்புசூரியன்’ என நடித்தார் ரஜினி. மேலும் ‘உருவங்கள் மாறலாம்’ என்ற படத்தில் கெளரவ வேடத்தில் நடித்தார்.


அதேபோல், ‘சட்டம்’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’ ஆகிய இரண்டு படங்களில் நடித்தார் கமல். ‘உருவங்கள் மாறலாம்’ படத்தில் கெளரவ வேடத்தில் நடித்தார்.


இந்த வருடத்தில், மணிவண்ணன் இயக்கத்தில், மோகன், சசிகலா, ரோகிணி, ஜனகராஜ் முதலானோர் நடித்த ‘இளமைக்காலங்கள்’ படம் வெளியானது. இளையராஜா இசை. எல்லாப் பாடல்களும் செம ஹிட்டு. குறிப்பாக ‘ஈரமான ரோஜாவே’ பாட்டு, அன்றைய காதலர்களின் தேசியகீதமானது. இந்த படத்தில் வரும் ‘ஊட்டிக்குப் போகாதீங்க’ வசனம் செம பாப்புலர். நூறுநாட்களைக் கடந்து ஓடியது.


இதேபோல், ஏவிஎம் தயாரிப்பில், இராம.நாராயணன் இயக்கத்தில், பிரபு, சில்க் ஸ்மிதா நடித்த ‘சூரக்கோட்டை சிங்கக்குட்டி’ வெளியானது. பிரபுவின் கேரியரில் இந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்தது. இளையராஜா இசை. ‘காளிதாசன் கண்ணதாசன்’ முதலான பாடல்கள் ஹிட்டடித்தன. ‘கோழி கூவுது’ படத்துக்குப் பிறகு பிரபு - சில்க் ஸ்மிதா ஜோடி இதிலும் தொடர்ந்தது.


இதே வருடத்தில், சிவகுமார், ஜெய்சங்கர், லட்சுமி, சுலக்‌ஷணா முதலானோர் நடித்து மேஜர் சுந்தர்ராஜன் இயக்கிய ‘இன்று நீ நாளை நான்’ திரைப்படம், ரசிகர்களிடம் நல்ல படம் எனப் பேரெடுத்தது. இளையராஜாதான் இசை. எல்லாப் பாடல்களும் ரசிகர்களை ரொம்பவே ஈர்த்தன.
‘ஒருதலை ராகம்’ தந்த டி.ராஜேந்தர், இந்த வருடத்தில்தான் இரண்டு படங்களைத் தந்தார். இரண்டுமே மெகா ஹிட்டு. முதலாவது ‘உயிருள்ளவரை உஷா’. கங்கா, நளினி, டி.ராஜேந்தர் நடித்திருந்த இந்தப் படம் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது. பல ஊர்களில் சில்வர் ஜூப்ளியைக் கடந்தும் ஓடியது. எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட்.


அடுத்து... ‘தங்கைக்கோர் கீதம்’. இதிலும் நளினி நடித்திருந்தார். சிவகுமார் ஹீரோ. நாகேஷ் மகன் ஆனந்த்பாபுவை இந்தப் படத்தின் மூலமாக அறிமுகம் செய்தார் டி.ராஜேந்தர். கொஞ்சம் காதல், கொஞ்சம் ஆக்‌ஷன், கொஞ்சம் சென்டிமென்ட் கலந்து ரகளை பண்ணியிருந்தார் ராஜேந்தர். மிகப்பிரமாண்ட வெற்றியைப் பெற்றது, ’தங்கைக்கோர் கீதம்’. சொல்லப்போனால், இந்த இரண்டு படங்கள்தான் டி.ராஜேந்தரின் மார்க்கெட் நிலவரத்தையே உயர்த்தின.


பின்னாளில், ‘உதயகீதம்’, ‘உன்னை நான் சந்தித்தேன்’ முதலான வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் கே.ரங்கராஜ், தன் முதல் படமான ‘நெஞ்சமெல்லாம் நீயே’ படத்தை இந்த வருடத்தில் வழங்கினார். மோகன், ராதா, பூர்ணிமா ஜெயராம் ஆகியோர் நடித்திருந்தனர். சங்கர் கணேஷ் இசை.


இந்தப் படத்தில் வாணி ஜெயராம் பாடிய பாடல், இன்றைக்கும் பலரின் செல்போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் பாடல்... ‘யாரது... சொல்லாமல் நெஞ்சள்ளிப் போனது’.


சிவாஜியும் பிரபுவும் நடித்த ‘மிருதங்க சக்ரவர்த்தி’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதேபோல், ராஜசேகர் இயக்கத்தில், தியாகராஜன், சரிதா, கவுண்டமணி, செந்தில் நடித்த ‘மலையூர் மம்பட்டியான்’ திரைப்படத்தின் வெற்றியும் தாக்கமும் இன்றைக்கும் நம்மால் மறக்க முடியாதது.
இந்தப்படத்துக்கும் இசை இளையராஜா. இதிலும் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.


ஏவிஎம்மின் ‘பாயும்புலி’ பெரிதாக ஓடவில்லை என்றாலும் ‘தூங்காதே தம்பி தூங்காதே’ 200 நாள் படமாக அமைந்தது. கமல், ராதா, சுலக்‌ஷணா நடித்திருந்தனர். கமலுடன் சுலக்‌ஷணா இணைந்து நடித்த முதல் படம் இதுதான். பிறகு இதுவரை இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை.
‘சும்மா நிக்காதீங்க’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’, ‘அட ராமா...’, ‘வருது வருது’, ‘வானம் கீழே வந்தாலென்ன’, ‘நானாக நானில்லை தாயே’ என எல்லாப் பாடல்களும் போட்டி போட்டுக்கொண்டு ஹிட்டடித்தன. இளையராஜாதான் இசை.


அதேபோல், கமல், மாதவி, சரத்பாபு நடிக்க, கே.பாலாஜியின் தயாரிப்பில், கே.விஜயன் இயக்கத்தில் உருவான ‘சட்டம்’ திரைப்படம் வெற்றியைத் தழுவியது. ‘தோஸ்தானா’ எனும் இந்திப் படத்தின் ரீமேக் இது. ’நண்பனே எனது உயிர் நண்பனே’, ‘ஒரு நண்பனின் கதை இது’, ‘வா வா என் வீணையே’, ’அம்மம்மா சரணம் சரணம்’, ‘தேகம் பட்டு...’ என்று எல்லாப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். இந்தப் படத்துக்கு இசை யார் என்று கேட்டால், இளையராஜா என்று சொல்லுவார்கள். ஆனால் இசை... கங்கை அமரன்.

SCROLL FOR NEXT