தமிழ் சினிமா

பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: இயக்குநர் பாக்யராஜ் சர்ச்சைக் கருத்து

செய்திப்பிரிவு

'கருத்துக்களை பதிவுசெய்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் பாக்யராஜ்.

ஆர்.பி.எம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாராகியுள்ள படம் 'கருத்துக்களை பதிவுசெய்'. முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (நவம்பர் 25) சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் பாக்யராஜ், எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, "என்னுடைய வெற்றிக்குக் காரணம் என் கருத்துகளை சினிமாவில் பயமில்லாமல் பதிவு செய்ததால்தான். என் இயக்குநரிடம் இந்தக் காட்சி நன்றாக இல்லை என்று வெளிப்படையாகச் சொல்லிவிடுவேன். அவர் கோபப்பட்டாலும் கவலைப்பட மாட்டேன்.

அதுபோல் இந்தப் படத்தில் குறிப்பாக இந்த விழாவில் பெண்களைக் கவுரவித்தார்கள். அது சந்தோஷமாக இருந்தது. மேலும் இந்த விழாவிற்கு காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி வந்திருக்கிறார். அவர் ஏதாவது கோரிக்கை இருந்தால் சொல்லுங்கள் என்றார். ஒரே கோரிக்கைதான். எல்லா தியேட்டர்களிலும் பெரிய படங்கள் போலவே சின்னப் படங்களும் ஓட வேண்டும். அதற்கு அரசாங்கம் தான் முடிவு எடுக்க வேண்டும்.

ஒரு பெண்ணுக்குத் தந்தை பாதுகாப்பிற்காகத்தான் போன் வாங்கிக் கொடுக்கிறார். ஆனால் பெண்கள் அதைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். அதை இந்தப் படத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதனால் விழிப்புணர்வு தேவை. ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது என்பது பழமொழி. அதைப் படத்தில் ஜாலியாகச் சொல்லியிருப்போம். ஆனால், அது உண்மை தான். பெண்கள் இடம் கொடுக்காமல் தவறு நடக்க வழி இல்லை.

பெண்கள் ஜாக்கிரதையாக இருந்தால் சரியாக இருக்கும். ஆண்களை மட்டுமே குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு செல்போன் வந்ததும் போய்விட்டது. எங்கே பார்த்தாலும் செல்போன் பேசிக்கொண்டே செல்கிறார்கள். அப்படி என்னதான் பேசுகிறீர்கள்?

பாலியல் பிரச்சினைக்குப் பெண்கள் தான் மூலகாரணம். ஆண்கள் சின்ன வீடு வைத்திருந்தாலும், மனைவியைத் தொந்தரவு செய்வதில்லை. ஆனால், வேறொரு ஆணுடன் இருக்கும் பெண்கள் குழந்தையையும், கணவரையும் கொலை செய்யும் அளவுக்குத் துணிகிறார்கள். பெண்கள் அந்த விஷயத்தில் தவறாகிவிட்டால், மிகப்பெரிய தவறில் கொண்டு போய் விட்டுவிடும். அதனால் தான் பெண்களுக்கு எப்போதும் சுய கட்டுப்பாடு வேண்டும் என்று சொல்வார்கள்.

இந்த செல்போன் வந்ததால் தான் பெண்கள் கட்டுப்பாட்டைத் தாண்டி எங்கேயோ சென்று கொண்டிருக்கிறார்கள். பொள்ளாச்சியில் நடந்த தவறுக்கு ஆண்கள் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. பெண்ணின் பலவீனத்தை அவன் உபயோகப்படுத்திக் கொண்டான். அவன் செய்தது தவறு என்றால், அந்த வாய்ப்பை உண்டாக்கிக் கொடுத்ததும் தவறு தான்” என்று பேசினார் இயக்குநர் பாக்யராஜ்.

பாக்யராஜின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT