தமிழ் சினிமா

அஸ்வந்துக்குப் புகழாரம் சூட்டிய ரன்வீர் சிங்: விஜய் சேதுபதி வெளியிட்ட ரகசியம்

செய்திப்பிரிவு

'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் சிறப்பாக நடித்திருந்த அஸ்வந்துக்குப் புகழாரம் சூட்டியுள்ளார் ரன்வீர் சிங். இதனையடுத்து படப்பிடிப்பில் நடந்த சம்பவம் ஒன்றையும் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.

இந்தியத் திரையுலகில் அனைத்து மொழிகளில் செயல்பட்டும் வரும் இணையதளம் ஒன்று 'கடந்த 10 ஆண்டுகளில் 100 சிறந்த நடிகர்கள்' என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தி, மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் சிறப்பாக நடித்த நடிகர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் தமிழில் 'கடல்' படத்தில் அர்ஜுன், 'மரியான்' படத்தில் தனுஷ், 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் மிஷ்கின், 'ஜிகர்தண்டா' படத்தில் பாபி சிம்ஹா, 'காக்கா முட்டை' படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்,'பாபநாசம்' படத்தில் கமல்ஹாசன், 'ஓ காதல் கண்மணி' படத்தில் நித்யா மேனன், 'காக்கா முட்டை' படத்தில் விக்னேஷ் மற்றும் ரமேஷ், 'ஜோக்கர்' படத்தில் குரு சோமசுந்தரம், '24' படத்தில் சூர்யா, 'ஆண்டவன் கட்டளை' படத்தில் விஜய் சேதுபதி, 'அருவி' படத்தில் அதிதி பாலன், 'காற்று வெளியிடை' படத்தில் அதிதி ராவ், 'குரங்கு பொம்மை' படத்தில் பாரதிராஜா, 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் கார்த்தி, 'விக்ரம் வேதா' படத்தில் மாதவன், 'ஆடை' படத்தில் அமலா பால், 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் அஸ்வந்த், 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் விஜய் சேதுபதி ஆகியோர் இடம்பெற்றனர்.

இதில் இடம்பெற்ற முக்கியமான நடிகர்களை ஒன்றிணைந்து வீடியோ பேட்டியும் எடுத்து வெளியிட்டுள்ளனர். இதில் அயுஷ்மான் குரானா, பார்வதி, தீபிகா படுகோன், ரன்வீர் சிங், அலியா பட், மனோஜ் பாஜ்பாய், விஜய் தேவரகொண்டா மற்றும் விஜய் சேதுபதி இடம்பெற்றனர். இந்தப் பேட்டியில் பலருமே 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்குப் பாராட்டு தெரிவித்தனர்.

'சூப்பர் டீலக்ஸ்' படம் குறித்துப் பேசும்போது ரன்வீர் சிங், "என் நண்பர் ஒருவர் தொலைபேசியில அழைத்தார். 'சூப்பர் டீலக்ஸ்' பார். அதில் ஒரு பத்து வயது சிறுவன் நடித்திருக்கிறான். அவனது நடிப்பைப் பார்த்தால் உன் மொத்த வாழ்க்கை, உன் மொத்த கலைத்திறனைப் பற்றி நீ மீண்டும் யோசிக்க வேண்டியிருக்கும் என்றார். நான் அவரை நம்பவில்லை.

ஆனால் 'சூப்பர் டீலக்ஸ்' பார்த்த பிறகு, அந்த ராசுக்குட்டியின் (அஸ்வந்த்) நடிப்பு ஒரு அரிதான நிகழ்வு என்பதை உணர்ந்தேன். அவன் நடிப்பு மாயாஜாலம் போல இருந்தது. படத்தைப் பார்க்காதவர்கள், விஜய் சேதுபதிக்கும் அந்தச் சிறுவனுக்கும் நடுவில் இருக்கும் பிணைப்பைத் தெரிந்து கொள்ளப் பார்க்க வேண்டும். விசேஷமான நடிப்பு" என்று தெரிவித்தார்.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக விஜய் சேதுபதி, "அவன் வசனத்தை மறந்துவிட்டால், அவனே சாரி என்று சொல்லிவிட்டு ஒன் மோர் போகலாம் என இயல்பாகச் சொல்வான். குமாரராஜா ஓகே சொல்வதே அரிது. எப்போதும் ஒன் மோர் கேட்பார். ஒரு காட்சி இருக்கும். அவன் தனது மற்ற நண்பர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருப்பான். அந்தக் காட்சியை அஸ்வந்தே இயக்கினான். ஆக்‌ஷன் சொல்லிவிட்டு, நடித்ததும் கட் சொல்லிவிட்டு ஒன் மோர் என்றான், (குமாரராஜாவைப் போலவே)" என்று தெரிவித்தார். இந்தப் பேச்சைப் பலரும் 'ஓ.. அப்படியா' என்று ஆச்சரியத்துடன் கேட்டார்கள்.

SCROLL FOR NEXT