தமிழ் சினிமா

'தர்பார்' பாடல்களுக்கு அனிருத்தைப் பாராட்டிய ரஜினி

செய்திப்பிரிவு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் 'தர்பார்' படத்தின் பாடல்களுக்காக அனிருத்தை பாராட்டியிருக்கிறார் ரஜினி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தர்பார்’. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்தின் தீம் மியூசிக்குடன் கூடிய மோஷன் போஸ்டர் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இந்தப் படத்தின் 'சும்மாகிழி' என்ற பாடல் நவம்பர் 27-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தப் பாடலை எஸ்.பி.பி பாடியுள்ளார். விவேக் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

இதனிடையே அனிருத்தின் ஸ்டுடியோவுக்குச் சென்ற ரஜினி, 'தர்பார்' பாடல்கள் அனைத்தையும் கேட்டுள்ளார். அப்போது ஏ.ஆர்.முருகதாஸும் உடன் இருந்துள்ளார். அனைத்து பாடல்களையும் கேட்டுவிட்டு, அனிருத்துக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார் ரஜினி. இந்தப் பாராட்டால் அனிருத் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்.

அனிருத் ஸ்டுடியோவில் ரஜினி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும், 'தர்பார்' படத்தின் இசை வெளியீட்டை டிசம்பர் 7-ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளது.

நயன்தாரா, நிவேதா தாமஸ், பிரதீக் பார்பர், சுனில் ஷெட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 2020-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது.

SCROLL FOR NEXT