'ரஜினி சொன்ன அதிசயமே விஜய் அண்ணாதான்' என்று கூறுகிறார் மதுரை வடக்கு விஜய் ரசிகர் மன்றப் பிரதிநிதி சிவசக்கரவர்த்தி. விஜய்யை அதிசயமே எனக் குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டியதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் 'கமல் 60' நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், "எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவார் என அவர் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். இதுபோன்று 2021-ல் தமிழக அரசியலில் அதிசயம் நிகழும்" எனக் கூறியிருந்தார். தேவைபட்டால் கமலுடன் இணைந்து செயல்படவும் தயார் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மதுரையின் எல்லீஸ் நகர், மஹபூப்பாளையம், ஆரப்பாளையம், காளவாசல், குரு தியேட்டர், பெத்தானியாபுரம் பகுதிகளில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
போஸ்டரை அடித்த ரசிகர் சிவசக்கரவர்த்தியிடம் பேசியபோது, "என் பெயர் சிவசக்கரவர்த்தி. 30 வயதாகிறது. சொந்தமாகத் தொழில் செய்து கொண்டிருக்கிறேன். என்னை என் வீடு உள்ள பகுதியில்கூட சிவசக்கரவர்த்தி என்று கேட்டால் தெரியாது கில்லி சிவா என்றால்தான் தெரியும். அந்த அளவுக்கு கடந்த 13 ஆண்டுகளாக நான் விஜய் அண்ணாவின் ரசிகராக இருக்கிறேன்" என்று பெருமைப் பட்டுக்கொண்டார்.
அவரிடம் இன்னும் சில கேள்விகள் எழுப்பினோம்:
எதற்காக போஸ்டர் ஒட்டினீர்கள், விஜய்க்கு பிறந்த நாள் கூட இல்லையே?
ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்னதாக 2021-ல் அதிசயம் நிகழும் என்று சொன்னார். நாங்கள் நீண்ட காலமாகவே எங்கள் அண்ணன் விஜய் அரசியலில் சாதிப்பார் எனக் கூறி வருகிறோம். தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிசயம் நிகழும் என்று சொன்னதால் இதுதான் எங்கள் தளபதியை அடையாளப்படுத்த சரியான நேரம் என்று நினைத்து போஸ்டர் அடித்தோம். ரஜினி அரசியலில் ஒரு வெற்றிடம் இருக்கிறது என்றார். அது உண்மைதான். அந்த வெற்றிடத்தை எங்கள் அண்ணன் நிரப்புவார்.
அதில் அதிசயங்களே என்று இருக்கிறதே.. ரஜினி, கமல், விஜய் மூவரையும் வரவேற்கிறார்களா?
ரஜினி சொன்ன அதிசயம் எங்கள் அண்ணன்தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. மூவரும் இணைந்தால் நன்றாக இருக்கும் என விரும்புகிறோம். மேலும், தமிழக அரசியலில் நடிகர்கள் ஆண்ட காலம் அதிகம். அந்த வரிசையில் இவர்கள் மூவரும் இணைய விரும்புகிறோம். மூவரும் இணைந்தாலும் முதல்வர் எங்கள் அண்ணன் விஜய்தான்.
விஜய் ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என நினைக்கிறீர்கள்?
விஜய் ஏன் வரக்கூடாது என பத்திரிகைகள் சொல்லட்டும். எங்கள் தளபதி சினிமாவில் நடித்தாலும் மறைமுகமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கிறார். மறைமுகமாகவே இவ்வளவு செய்யும் அவர் அரசியலுக்கு வந்தால் எவ்வளவு நன்மை செய்வார். அவர் வருகைக்காகக் காத்திருக்கிறோம். நாங்கள் தொண்டர்களாகி அவருக்காக வேலை செய்வோம். நாங்கள் பக்குவப்பட்டுவிட்டோம்.
விஜய் அரசியலுக்கு வந்துவிட்டால் நடிக்கத் தேவையில்லையா?
அதை அவரே சொல்லியிருக்கிறார். நான் அரசியல்வாதியாக நடிப்பேன். ஆனால் அரசியலில் நடிக்க மாட்டேன் என சொல்லியிருக்கிறார். நிறையப் படங்கள் நடித்துவிட்டார். இனி இளைஞர்களுக்கு வழிவிட்டு அவர் பொதுவாழ்வில் மக்களுக்கு இன்னும் நிறைய சேவை செய்ய வேண்டும் என விரும்புகிறோம்.
போஸ்டர் அரசியலுக்கு பெயர் போன மதுரையில் ஒட்டப்பட்ட விஜய்யின் இந்தக் குறிப்பிட்ட போஸ்டர் இரண்டு நாட்களாகவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.