சென்னையில் வேல்ஸ் நிறுவனம் நடத்திய வெற்றி விழாவினை மறைமுகமாகச் சாடியுள்ளார் பூச்சி முருகன்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பணிகள் சமீபமாக நடைபெறவில்லை என்ற காரணத்தை முன்வைத்து, நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்துள்ளது தமிழக அரசின் பதிவுத்துறை. இதனால், நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் விஷால் அணியிலிருந்து பணியாற்றி வருபவர் பூச்சி முருகன். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் கூட துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிட்டுள்ளார். இந்தத் தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், இன்னும் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவில்லை.
இதனிடையே தொடர்ச்சியாக விஷால் அணிக்கு எதிராகச் செயல்பட்டு வரும் ஐசரி கணேஷ் அணியைக் கடுமையாகச் சாடி வருகிறார் பூச்சி முருகன். நேற்று (நவம்பர் 24) சென்னையில் ஐசரி கணேஷ் அணியில் வேல்ஸ் நிறுவன வெற்றி விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு படக்குழுவினருக்கு விருதுகள் வழங்கினார்.
இந்த விழாவினையும், ஐசரி கணேஷையும் மறைமுகமாக தன் ஃபேஸ்புக் பதிவில் சாடியுள்ளார் பூச்சி முருகன். இது தொடர்பாக தன் பதிவில், "ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்று சொன்னவர் தலைவர் கலைஞர். ஆனால் சிலரோ ஓடாத படங்களுக்கு வெற்றி விழா என்ற பெயரில் ஆள்பவர்களை பல்வேறு வகைகளில் குளிர்விக்க விழா எடுப்பதன் மூலம் கலைஞர் கருணாநிதி தமிழ்த் திரைத்துறைக்குச் செய்த அளப்பரிய உதவிகளை இருட்டடிப்பு செய்ய முயல்கிறார்கள். ஆள்பவர்களைக் காக்கா பிடிப்பதற்காக கட்சி மாறுவதையே தனது கொள்கையாக வைத்து இருப்பவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
படப்பிடிப்புக் கட்டணங்களைக் குறைத்து, கேளிக்கை வரியை முற்றிலுமாக நீக்கி, திரைப்பட நலவாரியம் அமைத்து, திரையுலகினர் வாழ்வில் ஏற்றம் பெறச் செய்தவர் கலைஞர்தான்.
ஒட்டுமொத்தத் திரையுலகுக்கும், சின்னத்திரை கலைஞர்களுக்கும், சென்னை அருகே பையனூரில் வீடு கட்ட இடம் வழங்கி, இருண்டு கிடந்த திரையுலகினர் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர் கலைஞர்தான். ஆனால் நயவஞ்சகமாக ஆட்சியைப் பிடிக்கும் போதெல்லாம் திரைப்படத் துறையை நசுக்குவதையே குறிக்கோளாகக் கொண்டு இருப்பவர்கள் யார் என்பது சிறுபிள்ளைக்குக் கூடத் தெரியும்.
இப்போது கூட தமிழ் சினிமாவின் நலனைக் கெடுக்கும் விதமாக முக்கிய சங்கங்களை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருபவர்கள் யார் என்பதும் திரைத்துறையில் உள்ள அனைவருக்கும் தெரியும். ஆனால் மரத்தையே வெட்டும் கோடரிகள் போல திரைத்துறையிலேயே இருந்துகொண்டு அந்தத் துறையை அடகு வைக்கத் திட்டமிடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவும் விடிவும் வரும். அதுவரை பொறுத்திருப்போம்!" என்று தெரிவித்துள்ளார் பூச்சி முருகன்.