தமிழ் சினிமா

சந்தானம் படம் நிறைவு: அதர்வா படம் தொடக்கம் - கண்ணன் விறுவிறு

செய்திப்பிரிவு

சந்தானம் படம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அதர்வா படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் கண்ணன்.

'பூமராங்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் அதர்வா நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வந்தார் ஆர்.கண்ணன். இது தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'நின்னு கோரி' படத்தின் ரீமேக்காகும். இதில் அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடித்து வந்தார். அமிதாஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, கபிலன் வைரமுத்து வசனம் எழுதியுள்ளார்.

மசாலா பிக்ஸ் நிறுவனம் சார்பில் அவரே தயாரித்தும் வருகிறார். இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த சமயத்தில், இந்தப் படத்துக்கு முன்னர் திட்டமிடப்பட்ட சந்தானம் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார். ஏனென்றால் சந்தானம் உடனடியாக மொத்தமாகத் தேதிகள் கொடுத்ததால் தொடங்கப்பட்டது.

சந்தானத்துக்கு நாயகிகளாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் ஸ்வாதி முப்பலா ஆகியோர் நடித்து வந்தார்கள். முக்கியக் கதாபாத்திரத்தில் பழம்பெரும் நாயகி செளகார் ஜானகி நடித்துள்ளார். ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டு, 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் வெளியீடு என அறிவித்துள்ளார்கள்.

சந்தானம் படத்தை முடித்துவிட்டதால், தற்போது அதர்வா படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் ஆர்.கண்ணன். சென்னையில் வீடு அரங்கம் ஒன்றை அமைத்து சில காட்சிகளைக் காட்சிப்படுத்தவுள்ளனர். அதனைத் தொடர்ந்து வெளிநாட்டில் சுமார் 15 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதோடு அதர்வா படத்தின் படப்பிடிப்பும் முடிவு பெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஒரே சமயத்தில் இரண்டு படங்களின் இறுதிக்கட்டப் பணிகளிலும் ஈடுபடவுள்ளார் இயக்குநர் கண்ணன்.

SCROLL FOR NEXT