தமிழ் சினிமா

'ஆதித்ய வர்மா' வரவேற்புக்கு விக்ரம் கூறிய 5 காரணங்கள்

செய்திப்பிரிவு

'ஆதித்ய வர்மா' படத்துக்குக் கிடைத்த வரவேற்புக்கு, விக்ரம் 5 காரணங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

கிரிசாயா இயக்கத்தில் த்ருவ் விக்ரம், பனிட்டா சந்து, ப்ரியா ஆனந்த், அன்புதாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'ஆதித்ய வர்மா'. நவம்பர் 22-ம் தேதி வெளியான இந்தப் படம் தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்காகும்.

தமிழில் இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், புது நாயகனான த்ருவ் விக்ரம் படத்துக்கு, எதிர்பார்த்ததை விட நல்ல வசூல் கிடைத்திருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 'ஆதித்ய வர்மா' படக்குழு பத்திரிகையாளர்களைச் சந்தித்தது.

இந்தச் சந்திப்பில் நடிகர் விக்ரம் பேசும்போது, "விமர்சனங்களை எல்லாம் படிக்கும்போது நெகிழ்வாக இருந்தது. என் படங்களுக்கும் பல விமர்சனங்கள் கிடைத்துள்ளன. ஆனால், மகன் படத்தின் விமர்சனத்துக்கு முன் எதுவுமே எடுபடவில்லை.

இந்தப் படம் இந்த அளவுக்குப் பேசப்படுவதற்கு 5 முக்கிய காரணங்கள் உள்ளன. முதலில் இந்த மாதிரியான கதை மற்றும் கதாபாத்திரங்களை உருவாக்கியவர் சந்தீப் வாங்கா. அந்தக் கதைதான் நாம் அனைவரையும் நெகிழ்வூட்டியது. படத்தின் சாராம்சத்தை மாற்றாமல் எந்த மொழியில் பண்ணினாலும் படம் ஹிட்டாகும். அதற்கு சந்தீப் வாங்காவுக்கு நன்றி.

இரண்டாவதாக ஒரு டப்ஸ்மாஷ் பார்த்துவிட்டு, எங்கள் வீட்டுக்கு வந்து இந்தப் படத்தில் நடிக்கக் கேட்ட முகேஷ் சாருக்கு மிகப்பெரிய நன்றி. 'அர்ஜுன் ரெட்டி' படம் பார்த்துவிட்டு, இந்தப் படம் வெற்றியடையும் என்று நம்பினேன். நிறைய ஹீரோக்கள் ப்ரீயாக நடிக்கிறேன் என்று சொன்னபோதும், எங்களிடம் வந்து பேசிய முகேஷ் சாருக்கு மிகப்பெரிய நன்றி.

மூன்றாவதாக, ரவி.கே.சந்திரன் சார். முகேஷ் சாரிடம் ரவி.கே சந்திரன் சார் மட்டும் ஒளிப்பதிவு பண்ணினால் பெரிய பூஸ்ட்டாக படத்துக்கு இருக்கும் என்று சொன்னேன். இந்தப் படத்துக்குள் வந்து படத்தின் கலரையே மாற்றிவிட்டார். அது படத்துக்குப் பெரிய பலமாக இருந்தது.

நான்காவதாக அன்பு. இந்தக் கேரக்டரில் நடிக்கும் போது தினமும் சொல்வேன். இதை மட்டும் சரியாக பண்ணிவிட்டால், உனக்கு நிறைய வாய்ப்புகள் வரும் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன். ரொம்ப பாவம். படப்பிடிப்பில் ரொம்பவே டார்ச்சர் பண்ணிவிட்டேன். ஐந்தாவது என் ரசிகர்கள். என் படத்தை விட என் பையன் படத்தைப் பெரிய அளவில் கொண்டாடினீர்கள். அதைப் பார்த்து என்ன நினைப்பது என்று தெரியவில்லை.

இந்தப் படம் இப்படி வந்ததுக்குக் காரணம் இயக்குநர் கிரிசாயா. அவர் படத்துக்குள் வந்தவுடன் ஒவ்வொரு காட்சியுமே இவ்வளவு தான் தேவை என்பதில் தெளிவாக இருந்தார். நான் கேட்ட அனைத்து விஷயங்களையும் செய்து கொடுத்த தயாரிப்பாளர் முகேஷ் சாருக்கு நன்றி. இசையமைப்பாளர் ரதனிடம், 'நீ பெரிய இசை அமைப்பாளராக வருவாய்' என்று சொன்னேன். அது விரைவில் நடக்கும்.

என் பையனைப் பற்றிப் பேச விரும்பவில்லை. ரொம்ப நல்ல பையன். சொன்ன பேச்சைக் கேட்பான். நேரத்துக்குத் தூங்குவான். தம் எல்லாம் அடிக்கவே மாட்டான். இந்த மாதிரி ஒரு அறிமுகம் எந்தவொரு மகனுக்கும் கிடைக்காது என நினைக்கிறேன்" என்று பேசினார் விக்ரம்.

SCROLL FOR NEXT