நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேச மாநாட்டை மதுரையில் நடத்த வேண்டும், கட்சிக் கொடியை மதுரையில் தான் அறிமுகம் செய்ய வேண்டும் என மதுரை மாநகர் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி ரஜினிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மதுரை மாநகர் ரஜினி மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரை பழங்காநத்தத்தில் நேற்றிரவு நடைபெற்றது. மதுரை மாநகர் ரஜினி மன்ற பொறுப்பாளர் பாலதம்புராஜ் தலைமை வகித்தார்.
ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரி குமரவேல், மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.எம். ரபீக்,பாண்டியன், சேகர், கண்ணன், அழகர், பழனி பாட்சா, பால்பாண்டி உள்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்தக்கூட்டத்தில் ரஜினி மன்ற நிர்வாகிகள் பேசுகையில், ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி. அவரை தமிழகத்தின் முதல்வராக்கும் வரை ஒயமாட்டோம். ரஜினி எதிர்பார்க்கும் அதிசயத்தை நிகழ்த்தி காட்டுவோம் என்றனர்.
பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மதுரையில் டிச. 12-ல் ரஜினி பிறந்தநாளில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது, ரஜினி தனது அரசியல் பிரவேச முதல் மாநாட்டை மதுரையில் நடத்த வேண்டும், ரஜினி தனது அரசியல் கட்சியின் கொடியை மதுரையில் அறிமுகம் செய்ய வேண்டும், ரஜினி மதுரை மாவட்ட பேரவைத் தொகுதியில் போட்டியிட வேண்டும், ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கி.மகாராஜன்