ஹாட் ஸ்டாரில் 'கைதி' படத்தை வெளியிட்டதால், பல்வேறு திரையரங்குகளிலிருந்து அந்தப் படத்தை நீக்கியுள்ளனர்
கார்த்தி, நரேன், தினா, ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கைதி'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் இந்தப் படம் வெளியானது.
'பிகில்' படத்துக்குப் போட்டியாக அக்டோபர் 25-ம் தேதி வெளியானதால், முதல் வாரத்தில் 250 திரையரங்குகளில்தான் வெளியானது. ஆனால், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்ததால் தொடர்ச்சியாக திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டு வந்தன. தற்போது 30 நாட்களைக் கடந்துள்ள வேளையில் படத்தை ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு.
இந்த வெளியீட்டால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால், பி.வி.ஆர் திரையரங்குகள் அனைத்திலுமே 'கைதி' படத்தைத் திரையிடவில்லை. மேலும், சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கை தற்போது பி.வி.ஆர் நிறுவனம் தான் நிர்வகித்து வருவதால், அங்கிருந்தும் நீக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாகப் பலரும் ட்விட்டர் தளத்தில் எஸ்.ஆர்.பிரபுவைக் குறிப்பிட்டு கேள்விகள் எழுப்பினார்கள். அதற்கு அவர், "திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படங்களை 30 நாட்களில் ஆன்லைனில் வெளியிடுவது குறித்து பலரும் கவலைப்படுவதைக் காண்கிறேன்.
இந்தப் போக்கைத் தொடர்ந்தால் ஒருகட்டத்தில் மக்கள் தியேட்டருக்கு வருவது குறைந்து விடுமா? ஆம்! ஆனால் திருட்டு மற்றும் மூன்றாவது வாரத்திலேயே வசூல் குறைவு போன்றவற்றை இதன் மூலம் மட்டுமே தயாரிப்பாளர்கள் சமன் செய்ய முடியும்" என்று தனது ட்விட்டர் பதிவில் பதில் அளித்துள்ளார் எஸ்.ஆர்.பிரபு.