'இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிக்குமார் இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்க சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சூரரைப் போற்று'. இதனை 2டி நிறுவனமும், குனீத் மோங்காவும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
'சூரரைப் போற்று' படத்துக்குப் பிறகு அடுத்து யார் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார் என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. ஹரி படத்தில் நடிக்க சூர்யா முடிவு செய்துள்ளார். இதனையும் 2டி நிறுவனமே தயாரிக்கவுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
மேலும் பாலா, கெளதம் மேனன், வெற்றிமாறன் உள்ளிட்ட பல இயக்குநர்களின் பெயர்கள் சூர்யாவை இயக்கவுள்ளவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஆனால், எதுவுமே இன்னும் அடுத்தகட்டத்துக்கு நகரவில்லை. பேச்சுவார்த்தை அளவிலேயே இருக்கிறது.
இந்தப் பட்டியலில் புதிதாக 'இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிக்குமாரும் இணைந்துள்ளார். தனது முதல் படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கி வந்தார். ஆனால், இந்தப் படம் பைனான்ஸ் சிக்கலால் அடுத்தகட்டப் படப்பிடிப்பு எப்போது என்பதே தெரியாமல் இருக்கிறது. இதனால், புதிய படத்துக்கு நகர்கிறார் ரவிக்குமார்.
இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கவுள்ளார். அவர் கூறிய கதைக்கு சூர்யா பொருத்தமாக இருப்பார் என்று கருதிப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படமும் பெரும் பொருட்செலவு என்பதால், படப்பிடிப்புக்கு முன் பணிகளே 3 மாதங்கள் வரை நடைபெறவுள்ளது.