ஜோதிகா நடிப்பில் உருவாகி வந்த 'பொன்மகள் வந்தாள்' படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று இருக்கிறது.
திருமணத்துக்குப் பிறகு '36 வயதினிலே' படத்தின் மூலம் மீண்டும் திரையுலகினருக்குத் திரும்பினார் ஜோதிகா. ஒரே சமயத்தில் பல்வேறு படங்களில் நடிக்காமல், ஒரு படத்தை முடித்துவிட்டு, அடுத்த படம் என ப்ளான் பண்ணி நடித்து வருகிறார்.
கல்யாண் இயக்கத்தில் வெளியான 'ஜாக்பாட்' படத்தைத் தொடர்ந்து புதிய படத்தில் நடிக்கத் தொடங்கினார் ஜோதிகா. புதுமுக இயக்குநர் ஜே.ஜே பிரட்ரிக் இயக்கி வந்தப் படத்தில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜ், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்கள்.
சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வந்த இந்தப் படம் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் பெரும்பாலான காட்சிகளைப் படமாக்கினார்கள். அனைத்து நடிகர்களும் கொண்ட இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது.
தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதன் இறுதி நாள் படப்பிடிப்பில் சூர்யா கலந்து கொண்டு படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
கோவிந்த் வசந்தா இசையமைப்பாளராக பணிபுரிந்து வரும் இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். ரூபன் எடிட்டராக பணிபுரிந்து வருகிறார். 'பொன்மகள் வந்தாள்' படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஜோதிகாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.