தமிழ் சினிமா

நடிகர் சங்கக் கட்டிட சிக்கல்: ஆர்.கே.சுரேஷ் வருத்தம் 

செய்திப்பிரிவு

நடிகர் சங்கக் கட்டிடம் கட்டி முடிக்கப்படாமல் சிக்கலில் உள்ளது வருத்தமடையச் செய்கிறது என்று ஆர்.கே.சுரேஷ் பேசினார்.

அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ் இயக்கத்தில் உருவான படம் 'எதிர்வினையாற்று'. இதில் அலெக்ஸ், சனம் ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன், சம்பத் ராம், அனுபமா குமார், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் நாயகன் அலெக்ஸ், சனம் ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், சம்பத்ராம், லட்சுமி பிரியா, ஒளிப்பதிவாளர் மனோஜ் நாராயணன், தயாரிப்பாளர் தனஞ்செயன், விஜிபி சந்தோஷம், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இதில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசும்போது, ''சினிமாவில் விநியோகஸ்தராக வந்து தயாரிப்பாளராக மாறி, இயக்குநர் பாலா மூலம் படத்தில் நடிகராக அறிமுகமாகி இந்த வளர்ச்சியை அடைந்துள்ளேன். படத்தின் தயாரிப்பாளர் அனிதா மேடத்திற்காகவே நான் நடிக்க ஒப்புக்கொண்டேன். அலெக்ஸ் மேல் எனக்கு யோசனை இருந்தது. டாக்டராக இருந்தவர் எப்படி படத்தைச் சரியாக எடுக்கப்போகிறார் என்று நினைத்தேன். ஆனால் அவர் கதை சொல்லிய விதத்திலே இவர் சரியாக எடுத்துவிடுவார் என்று முடிவு செய்துவிட்டேன். இந்தப்படத்தில் புதிதாக ஒரு விசயத்தை அலெக்ஸ் கையாண்டிருக்கிறார்.

முத்தக் காட்சி எடுப்பது தவறில்லை. முத்தம் அன்பின் வெளிப்பாடு, அதுபோன்ற காட்சிகளை தவறு என்று சொல்லக் கூடாது. நிச்சயம் படம் பெரிதாகப் பேசப்படும்.

நடிகர் சங்கக் கட்டிடம் கட்டி முடிக்கப்படாமல் சிக்கலில் உள்ளது வருத்தமடையச் செய்கிறது. எல்லா படங்களுக்கும் தியேட்டர் கிடைக்க வேண்டும் என்று விஷாலிடம் கூறினேன். ஆனால், அப்படி நடக்கவில்லை. படங்கள் எடுப்பவர்கள் கவனித்து எடுங்கள். விநியோகிஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர் சங்கங்கள் சரியாக இயங்கினால்தான் திரைத்துறை நன்றாக இருக்க முடியும்" என்றார்.

SCROLL FOR NEXT