'ஹீரோ' படத்துக்கு இருந்த சிக்கல் தீர்ந்துவிட்டதாகத் தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தெரிவித்துள்ளது.
மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன், அபய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஹீரோ'. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்ற நடுவர் மையத்தில் முறையிட்டது. இந்த மனுவை விசாரித்து தடையும் விதிக்கப்பட்டது. இதனால் 'ஹீரோ' சிக்கலின்றி வெளியாகுமா என்ற சர்ச்சை எழுந்தது.
ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தங்களுக்கும் அந்த மனுவுக்கும் சம்பந்தமில்லை என்று அறிவித்தது. ஆனாலும், இது தொடர்பான பேச்சுவார்த்தையில் இறங்கியது. தற்போது இதில் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தங்களுடைய ட்விட்டர் பதிவில், "டி.எஸ்.ஆர் மூவிஸ் நிறுவனத்திடம் பேசி 'ஹீரோ' வெளியீடு தொடர்பான அனைத்து சிக்கல்களுக்கும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன. திட்டமிட்டபடி டிசம்பர் 20-ம் தேதி 'ஹீரோ' வெளியாகும். இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இசை, ட்ரெய்லர் மற்றும் 'ஹீரோ' கேம் என விளம்பரப்படுத்தும் பணிகள் வரிசை கட்டும்" என்று தெரிவித்துள்ளது கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ்.