மகன் த்ருவ் விக்ரம் நடித்துள்ள 'ஆதித்ய வர்மா' படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் விக்ரம் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
சந்தீப் வாங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'அர்ஜுன் ரெட்டி'. இதன் இந்தி ரீமேக்கும் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம் நடிக்க 'ஆதித்ய வர்மா' தமிழ் ரீமேக் நேற்று வெளியானது.
'அர்ஜுன் ரெட்டி' படத்தில் முதல்நிலை உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிரிசாயா 'ஆதித்ய வர்மா'வை இயக்கியுள்ளார். பனிட்டா சந்து, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் த்ருவ் விக்ரமுடன் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ள இந்தப் படம் வசூல் ரீதியாக எப்படியிருக்கும் என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.
இந்நிலையில், தன் மகனின் படத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது குறித்து விக்ரம் அளித்துள்ள பேட்டியில், "நான் சொல்ல ஒன்றுமில்லை. மக்கள் சொல்லிவிட்டார்கள். என் படம் வெளியாவதை விட, பையனுடைய படம் வெளியாவது பெரிய விஷயமாக இருக்கிறது. ரொம்ப நெகிழ்ச்சியுடன் இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் விக்ரம்.
'ஆதித்ய வர்மா' படத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்பால், தற்போது பல முன்னணி இயக்குநர்களும் த்ருவ் விக்ரமுக்குக் கதை சொல்ல அணுகி வருகிறார்கள். ஆனால், இந்தப் படத்தின் வசூல் நிலவரங்கள் உள்ளிட்ட அனைத்தும் முடிவானவுடன், அடுத்த படத்தை முடிவு செய்யவுள்ளார் த்ருவ் விக்ரம்.