விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத் நடித்து வரும் 'தலைவி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத் நடிப்பில் உருவாகும் படம் 'தலைவி'. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு மைசூரில் தொடங்கி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு ஆயத்தமாகி வருகிறது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது.
இதில் எம்.ஜி.ஆராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அரவிந்த்சாமி. மதுபாலா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. மேலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலமாக 2020-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி வெளியீடு என்றும் அறிவித்துள்ளனர்.
'தலைவி' படத்தின் திரைக்கதையை இயக்குநர் ராஜமெளலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் எழுதியிருக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் 'தலைவி' என்ற பெயரிலேயே உருவாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ள இந்தப் படத்துக்கு ஹாலிவுட் ஒளிப்பதிவாளரான விஷால் விட்டல் ஒளிப்பதிவு செய்து வருகிறார். விஷ்ணு இந்தூரி மற்றும் சைலேஷ் ஆர் சிங் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.