விஜய் சேதுபதி நடித்து வரும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இயக்குநர் மோகன் ராஜா.
குரு ரமேஷ் இயக்கத்தில் உருவான 'என்ன சத்தம் இந்த நேரம்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் இயக்குநர் மோகன் ராஜா. 2014-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி இந்தப் படம் வெளியானது. இது போதிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், இந்தப் படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜாவுக்கு நடிப்பதற்கு பல்வேறு வாய்ப்புகள் வந்தன. ஆனால், அனைத்தையுமே தவிர்த்து வந்தார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'வேலைக்காரன்' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் மோகன் ராஜா. தற்போது அந்தப் படம் 'தனி ஒருவன் 2' என்பது உறுதியாகியுள்ளது. ஜெயம் ரவி நடிக்கவுள்ள இந்தப் படத்தின் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தாலும், அவர் பல்வேறு படங்களில் நடித்து வருவதால் எப்போது படப்பிடிப்பு என்பது தெரியாமல் இருக்கிறது.
இதனிடையே, எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்’. விஜய் சேதுபதி நாயகனாக நடித்து வரும் இந்தப் படத்தில் மேகா ஆகாஷ், மகிழ் திருமேனி, விவேக் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தற்போது இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் மோகன் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் நடிக்கும் 2-வது படமாக இது அமைந்துள்ளது. இந்த அறிவிப்பை அவரது தம்பி ஜெயம் ரவி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா, ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துசுவாமி, கலை இயக்குநராக ஜான் பிரிட்டோ, எடிட்டராக சதீஷ் சூர்யா ஆகியோர் இந்தப் படத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.