தமிழ் சினிமா

நாயகன், நாயகி மாற்றம்!

செய்திப்பிரிவு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘ஆயுத எழுத்து’ தொடரில், சக்திவேல் கதாபாத்திரத்தில் அம்ஜத்கான், இந்திரா கதாபாத்திரத்தில் ஸ்ரீது கிருஷ்ணன் நடித்து வந்தனர். தற்போது இந்த கதாபாத்திரங்களில் ஆனந்த் செல்வன், சரண்யா நடிக்கத் தொடங்கியுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் நடக்கும் கதைக் களமாக இத்தொடர் நகர்கிறது. அங்கு காளியம்மா (நடிகை மவுனிகா) ஒரு பெரிய புள்ளி. அவரது மகன் சக்திவேல், அம்மா சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பவர். இந்திரா என்ற இளம் உதவி ஆட்சியர் அப்பகுதிக்கு மாற்றலாகி வருகிறார்.

காளியம்மாவின் மகன் என்ற விவரம் தெரியாமலேயே சக்திவேலை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார் இந்திரா. இதையடுத்து, மூவருக்கும் இடையே பெரிய அளவில் பிரச்சினை வெடிக்கிறது. அதை சுற்றி நடக்கும் நிகழ்வுகளே கதைக் களம்.

இப்படி தொடர் நகர்ந்துகொண்டு இருக்கும் நிலையில், திடீரென நாயகன், நாயகி இருவரையும் மாற்றி புதிய ஜோடிகளை களம் இறக்கியுள்ளது விஜய் டிவி நிர்வாகம்.

இந்த திடீர் மாற்றம் குறித்து விஜய் டிவி சேனல் தரப்பில் விசாரித்தபோது, ‘‘இனி வரும் வாரங்களில் திருப்புமுனை மிக்க பல நிகழ்வுகள் நடக்க உள்ளன. நேயர்கள் மத்தியில் நன்கு பரிச்சயமான முகங்களாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பதாலேயே ஆனந்த் செல்வனும், சரண்யாவும் களமிறக்கப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT