தமிழ் சினிமா

கதைக்களம் மற்றும் தலைப்பு குறித்து வதந்தி: 'தளபதி 64' படக்குழுவினர் கோபம்

செய்திப்பிரிவு

படத்தின் கதைக்களம் மற்றும் தலைப்பு குறித்து பல்வேறு வதந்திகள் வருவதற்கு 'தளபதி 64' படக்குழுவினர் கோபத்துடன் மறுப்பு தெரிவித்தனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் விஜய். 'தளபதி 64' என்ற பெயரில் அழைக்கப்பட்டு வரும் இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, டெல்லியில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரங்கள் கொண்டு கல்லூரி காட்சிகளை படமாக்கி முடித்துவிட்டு, தற்போது சண்டைக்காட்சி ஒன்றைப் படமாக்கி வருகிறது படக்குழு.

இதில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஆண்ட்ரியா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், விஜே ரம்யா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். அடுத்தாண்டு கோடை விடுமுறைக்குப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே, 'தளபதி 64' படம் மருத்துவம் மற்றும் நீட் சம்பந்தப்பட்ட கதை என்றும், 'டாக்டர்' தலைப்பு என்றும் பலரும் செய்திகள் வெளியிட்டார்கள். இது தொடர்பாகப் படக்குழுவினரிடம் கேட்ட போது, "ஒரு பெரிய நடிகரின் படம் வரும் போது, இது தான் கதை என்று பலரும் எழுதுவது மிகவும் வருத்தத்துக்குரியது.

பல கோடிகள் முதலீடு கொண்ட படத்துக்கு இந்த மாதிரியான செய்திகள் வியாபாரத்தைப் பாதிக்கும். அந்தச் செய்தியில் உண்மை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. தளபதி 64 படத்தின் கதை நீட் விவகாரம், மருத்துவம் போன்றவற்றை மையப்படுத்தியது அல்ல. 'டாக்டர்' என்ற தலைப்பிலும் உண்மை அல்ல" என்று காட்டமாகத் தெரிவித்தனர்

          
SCROLL FOR NEXT