தமிழ் சினிமா

இரும்புக்கடையில் வேலை செய்கிறவர்களின் வலியை யாரும் கண்டுகொள்வதில்லை: 'குண்டு' இயக்குநர் வேதனை

செய்திப்பிரிவு

இரும்புக்கடையில் வேலை செய்கிறவர்களின் வலியை யாரும் கண்டுகொள்வதில்லை என்று 'குண்டு' இயக்குநர் அதியன் ஆதிரை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

அதியன் அதிரை இயக்கத்தில் தினேஷ், ஆனந்தி, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'. நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்துள்ளார். டிசம்பர் 6-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் பா.இரஞ்சித் வரவேற்றுப் பேசினார்.

இதில் இயக்குநர் அதியன் ஆதிரை பேசியதாவது:

''தோழர் என்ற வார்த்தையைச் சொன்னதிற்காக என்னை வேலையை விட்டுத் துரத்தி இருக்கிறார்கள். ஆனால் பா.இரஞ்சித் என்னை அதே அடையாளத்தோடு அறிமுகப்படுத்துகிறார். அது நெகிழ்ச்சியாக இருக்கிறது. இரும்புக்கடையில் வேலைசெய்யும் போது சுவாசிக்கிற காற்று மிகவும் கொடியது. இரும்புக்கடையில் வேலை செய்கிறவர்கள் எத்தனையோ பேர் வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள்.

ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் அண்ணன் எனக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் இருந்துள்ளார். இரு குழந்தைகளுக்கு அப்பாவாக பா.ரஞ்சித் அண்ணனிடம் வந்து சேர்ந்தேன். அதன்பின் எனக்குக் கஷ்டமே வந்ததில்லை. ’இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் ஒரு லாரி டிரைவரின் கதை இருக்கிறது. இரும்புக்கடையில் வேலை செய்கிறவர்களின் வலியை யாரும் கண்டுகொள்வதில்லை. இன்னொருத்தனின் உழைப்பைச் சுரண்டும் சமூகமாகத்தான் இந்தச் சமூகம் இருக்கிறது. இந்த சினிமா உன் இயல்பை அழித்துவிடக்கூடாது என்று பா.ரஞ்சித் சொன்னார்.

இந்தப் படம் மிக முக்கியமான ஒரு விசயத்தைப் பதிவு செய்யும். இந்தச் சமூகத்தில் நடக்கும் எல்லா விசயங்கள் மீதும் நாம் ஒரு கண் வைக்க வேண்டும் என்பதை இப்படம் உணர்த்தும். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பா.ரஞ்சித், "நீலம் புரொடக்சனுக்கு பெரிய வாசலைத் திறந்து வைத்துவிட்டாய்" என்றார். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இந்தக் கதைக்குள் தினேஷ் வந்ததும் எனக்கு ஒரு கர்வம் வந்தது. ஏன் என்றால் ’அட்டகத்தி’ படம் வந்த பிறகு எனக்கான கதைகளையும் படம் பண்ண முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.

தோழர் ஆனந்தி அவங்க மனசு போலவே படத்தில் அழகாக நடித்துள்ளார். ரித்விகா என் மனதுக்கு நெருக்கமான தோழி. அவரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். படம் பார்த்த அனைவரும் முனிஷ்காந்த் நடிப்பைப் பாராட்டி இருக்கிறார்கள். படத்தில் அனைவருமே மிகச்சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளனர்''.

இவ்வாறு அதியன் ஆதிரை பேசினார்.

SCROLL FOR NEXT