கவர்ச்சிகரமான படங்களை வெளியிட்டதில் என்ன தவறு இருக்கிறது என்று நடிகை ஈஷா ரெப்பா காட்டமாகப் பதில் அளித்துள்ளார்.
தெலுங்கில் பல படங்களில் நாயகியாக நடித்தவர் ஈஷா ரெப்பா. தமிழில் ஜி.வி.பிரகாஷுக்கு நாயகியாக 'ஆயிரம் ஜென்மங்கள்' படத்தில் நடித்துள்ளார். எழில் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் டிசம்பர் மாதம் 20-ம் தேதி வெளியாகவுள்ளது.
இதனிடையே சமீபமாக தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டார் ஈஷா ரெப்பா. அப்படங்களில் கவர்ச்சி அதிகமாக இருந்தது. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
தெலுங்கில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும்போது ஈஷா ரெப்பாவிடம், போட்டோ ஷூட் புகைப்படங்கள் தொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "நான் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை. தெலுங்குப் பெண்கள் இப்படியான கதாபாத்திரங்கள் மட்டும்தான் செய்வார்கள் என்று துறையில் முடிவெடுத்து விடுகிறார்கள். அதைப் பொய்யாக்கி என்னால் எந்தக் கதாபாத்திரமும் செய்ய முடியும் என்பதை நிரூபிக்க விரும்புகிறேன்.
கவர்ச்சிகரமான புகைப்படங்கள் வெளியிட்டதில் என்ன தவறு இருக்கிறது. நான் கவர்ச்சியான பெண். அந்தப் புகைப்படங்களைப் பதிவிட்டதில் எந்தத் தவறும் இல்லை. வரம்பு மீறாத வரையில் கவர்ச்சிகரமான உடைகள் அணிவதில் எனக்குப் பிரச்சினை இல்லை. பார்ப்பவர்கள் கண்ணில்தான் எல்லாம் உள்ளது” என்று காட்டமாகப் பதில் அளித்துள்ளார் ஈஷா ரெப்பா.