தமிழ் சினிமா

வேல்ஸ் ஃபிலிம்ஸ் வெற்றி விழா: முதல்வர் பழனிசாமி பங்கேற்பு

செய்திப்பிரிவு

வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் வெற்றி விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்து கொள்கிறார்.

‘வாக்குமூலம்’ படத்தின் மூலம் 1991-ம் ஆண்டு தயாரிப்பாளரானவர் ஐசரி கணேஷ். இவருடைய வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் படங்களைத் தயாரித்து வருகிறது.

2016-ம் ஆண்டு ‘தேவி’ படத்தின் மூலம் மறுபடியும் சினிமா தயாரிப்பில் ஐசரி கணேஷ், ‘போகன்’, ‘சம்டைம்ஸ்’, ‘ஜுங்கா’, ‘எல்கேஜி’, ‘தேவி 2’, ‘கோமாளி’, ‘பப்பி’ ஆகிய படங்களை இதுவரை தயாரித்துள்ளது. மேலும், ‘சுமோ’, ‘கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு’, ‘சீறு’, ‘ஜோஷ்வா’, ‘மூக்குத்தி அம்மன்’ ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறது.

இதில், ‘கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு’ படம் 3டி அனிமேஷன் முறையில் உருவாகிறது. மோஷன் பிக்சர் முறையில் எம்.ஜி.ஆரை உருவாக்கி, நடிக்க வைக்கின்றனர். மேலும், சயீஷா மற்றும் அக்‌ஷரா கவுடா ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த வருடம் (2019) வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான மூன்று படங்களுமே நன்றாக ஓடி, வெற்றிப் படங்கள் லிஸ்ட்டில் இடம் பிடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ‘கோமாளி’ 100 நாட்களும், ‘எல்கேஜி’ 50 நாட்களும், ‘பப்பி’ 25 நாட்களும் ஓடியதாக வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே, இதைக் கொண்டாடும் வகையில் வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகிற 24-ம் தேதி மாலை, ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த விழா நடைபெறுகிறது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, 3 படங்களின் கலைஞர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்குகிறார்.

SCROLL FOR NEXT