கமல், ரஜினி, விஜய் மூவரும் மாய பிம்பங்கள்; அஜித் கண்ணியமான நடிகர் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
கமல் திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், ‘கமல் 60’ என்ற தலைப்பில் ‘உங்கள் நான்’ எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பல்வேறு சினிமா பிரபலங்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், “கமலுடன் ரஜினி இணைந்து அரசியல் செய்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது” என வேண்டுகோள் விடுத்தார். இதுதான் கடந்த சில நாட்களாக விவாதப் பொருளாகி இருக்கிறது.
இதுகுறித்து ரஜினி - கமலிடம் தனித்தனியாகக் கேள்வி எழுப்பியபோது, ‘தேவையும் சூழ்நிலையும் ஏற்பட்டால் இணைவோம்’ என்று பதில் அளித்தனர்.
இந்நிலையில், சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், ‘திராவிட அரசியலுக்கும், திராவிடக் கட்சிகளுக்கும் எதிராக கமல் - ரஜினி அரசியல் வருகிறதா?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
“எல்லோரையும் அவர்கள் சேர்த்துக் கொள்ளட்டும். எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. அதிமுக தலைமையிலான கூட்டணி, பலம் மிக்க வலுவான கூட்டணி. இந்தக் கூட்டணிக்கு முன், கமல் - ரஜினி இணைவதெல்லாம் பெரிய அளவில் பேர் சொல்லும்படி இல்லை. மூணு பேராக வந்தாலும் சரி, மொத்தமாக வந்தாலும் சரி... அதிமுக கூட்டணி முன் இதெல்லாம் தூள் தூளாகிவிடும்.
இவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு மாய பிம்பத்தை உருவாக்குகின்றனர். கமல், ரஜினி, விஜய் எல்லோருமே மாய பிம்பங்கள். ‘கானல் நீர்’ போன்றவர்கள். தமிழ்நாடு அரசியலில் இவர்கள் எடுபட மாட்டார்கள்” என்று பதில் அளித்தார் ஜெயக்குமார்.
‘அஜித்தும் இதில் இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொன்னாரே...’ என்ற கேள்விக்கு, “அவரெல்லாம் இதில் இல்லை. அவர் கண்ணியமான நடிகர். அவரிடம் தொழில் பக்தியும், புரிதலும் இருக்கிறது. திரைப்படத் துறையில் இருந்து எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் அரசியலுக்கு வந்து முதல்வராகி, தமிழகத்தை வளர்ச்சி மிகுந்த மாநிலமாகக் கொண்டு சென்றனர். இது அஜித்துக்குத் தெரியும் என்பதால், அதைப்பற்றி அவர் பேசுவதில்லை” எனத் தெரிவித்துள்ளார் ஜெயக்குமார்.