தமிழ் சினிமா

ஞானவேல்ராஜாவுக்கு பிடிவாரண்ட்: ட்விட்டரில் மனைவியின் கிண்டல் பதிவு

செய்திப்பிரிவு

ஞானவேல்ராஜாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், அதை கிண்டல் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அவருடைய மனைவி நேஹா.

பிரபல தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இவர் கடந்த 2007-08, 2008-09-ம் ஆண்டுக்கான தனது வருமானத்தை மறைத்து, வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால், விசாரணைக்காக ஞானவேல்ராஜா நீதிமன்றத்தில் ஒருமுறை கூட ஆஜராகவில்லை. எனவே, கடந்த 18-ம் தேதி நடைபெற்ற விசாரணையில், ‘பலமுறை வாய்ப்பளித்தும் ஞானவேல்ராஜா ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும்’ என நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார் வருமானவரித் துறை தரப்பு வழக்கறிஞர்.

இதை ஏற்றுக் கொண்ட எழும்பூர் நீதிமன்ற நீதிபதி, ஞானவேல்ராஜாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். பின், இந்த வழக்கின் விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானது.

இந்நிலையில், ஞானவேல்ராஜா மனைவி நேஹா, ட்விட்டரில் இதுகுறித்து நக்கலான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வரி ஏய்ப்பு புகாரா? வரியை ஏய்க்கவும் இல்ல, மேய்க்கவும் இல்ல. அரைவேக்காட்டுத்தனமான செய்தித் தொலைக்காட்சிகள் மற்றும் அவற்றைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுபவர்கள். இதுல பிடிவாரண்ட் வேற. ஸ்ப்ப்ப்பா... முடியல” என நக்கலாகத் தெரிவித்துள்ளார் நேஹா.

பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஞானவேல்ராஜா நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து பிடியாணையிலிருந்து விலக்கு பெறலாம். ஆனால் அடுத்து வரும் விசாரணையில் அவர் கண்டிப்பாக ஆஜராகவேண்டி இருக்கும்.

SCROLL FOR NEXT