தமிழ் சினிமா

‘மூக்குத்தி அம்மன்’ படத்துக்காக நயன்தாரா விரதம்: ஆர்ஜே பாலாஜி தகவல்

செய்திப்பிரிவு

‘மூக்குத்தி அம்மன்’ படத்துக்காக நயன்தாரா விரதம் இருக்கிறார் என ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஆர்ஜே பாலாஜி நாயகனாக நடித்து வெளியான ‘எல்.கே.ஜி’ படம், பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் கதை, திரைக்கதையைத் தனது நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்கினார் ஆர்ஜே பாலாஜி. இந்தப் படத்தைத் தயாரித்த வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம், அடுத்த படத்தையும் தங்களுக்கே செய்யுமாறு அவருக்கு அட்வான்ஸ் கொடுத்தது.

எனவே, புதிய படத்துக்கான கதையையும் தனது நண்பர்களுடன் சேர்ந்து எழுதிய ஆர்ஜே பாலாஜி, அதில் அவரே நாயகனாக நடித்து, இயக்க முடிவு செய்துள்ளார். அவரோடு இணைந்து என்.ஜே.சரவணனும் இயக்குநர் பொறுப்பைக் கவனிக்கவுள்ளார். இவர்கள் இருவருமே ‘எல்.கே.ஜி.’ படத்தில் முதல்நிலை உதவி இயக்குநர்களாகப் பணியாற்றியவர்கள்.

ஆர்ஜே பாலாஜி இயக்குநராக அறிமுகமாகவுள்ள படத்துக்கு ‘மூக்குத்தி அம்மன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பிரதான பாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். முழுக்கதையும் அவர்மீது பயணிப்பது போலத் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கி கோடை விடுமுறைக்கு வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய படத்தின் அறிவிப்பை, கடந்த 10-ம் தேதி நடைபெற்ற இந்தியா - வங்கதேச அணிகள் மோதிய 3-வது டி20 கிரிக்கெட் போட்டி வர்ணனையில் அறிவித்தார் ஆர்ஜே பாலாஜி.

இந்நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதுகுறித்துப் பேசிய ஆர்ஜே பாலாஜி, “இது சர்ச்சைக் கதையல்ல. நீண்ட வருடங்களுக்குப் பிறகு தமிழில் வெளிவரவுள்ள அம்மன் படம் இது. கன்னியாகுமரியில் உள்ள அம்மனை, மூக்குத்தி அம்மன் என்று அழைப்பர். எனவே, அங்கு சென்று பூஜை போட்டு படப்பிடிப்பைத் தொடங்க உள்ளோம்.

அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். எனவே, அதற்காக விரதம் இருக்கிறார்” என்றார்.

நயன்தாரா நடிப்பில் அடுத்து ‘தர்பார்’ படம் ரிலீஸாக இருக்கிறது. இதுதவிர, விக்னேஷ் சிவன் தயாரிப்பில், மிலிந்த் ராவ் இயக்கத்தில் தற்போது ‘நெற்றிக்கண்’ படத்தில் நடித்து வருகிறார்.

SCROLL FOR NEXT