கமலின் சில படங்களைப் பார்த்திருந்தால் நான் சினிமாத்துறைக்கே வந்திருக்க மாட்டேன் என விஜய் சேதுபதி தெரிவித்தார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான கமல்ஹாசன், திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகள் ஆகின்றன. இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டன. இதில், ‘கமல் 60’ என்ற தலைப்பில் ‘உங்கள் நான்’ என்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சி, சென்னையில் நேற்று முன்தினம் (நவம்பர் 17) நடைபெற்றது. இதற்காக தமிழ்த் திரையுலகினர் பலரும் அழைக்கப்பட்டிருந்தனர்.
இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிகுமார், ஷங்கர், மணிரத்னம், சேரன், அமீர், நடிகர்கள் ரஜினி, விஜய் சேதுபதி, கார்த்தி, வடிவேலு, ஜெயம் ரவி, நடிகைகள் தமன்னா, மனிஷா கொய்ராலா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியதாவது:
“நாசர், சத்யராஜ், வடிவேலு ஆகியோர் இங்கு பகிர்ந்த விஷயங்கள் எல்லாம் நமக்கு மிகப்பெரிய படிப்பினைகள். கமல் என்ற படைப்பாளி, தளத்தில் எப்படி இயங்குவார் என்று அவர்கள் பகிர்ந்தனர். அது, கமலின் சிந்தனை ஓட்டத்தின் முன்னோட்டமே. கமலுடன் பணியாற்றிய அனைத்து நடிகர்களையும் யாராவது பேட்டி எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அது, பல இளம் தலைமுறை நடிகர்களுக்கு உதவும்.
எனக்கு ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது சிந்தனை ஓட்டத்தைத் தெரிந்து கொண்டேன். கமலுடன் சேர்ந்து நடிக்க ‘இந்தியன் 2’வில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அதைத் தவற விட்டுவிட்டேன். இப்போது நான் அவரிடம் வெளிப்படையாகக் கேட்கிறேன், ‘சார், உங்களுடன் பணியாற்ற ஒரு வாய்ப்பு தாருங்கள்.’
நான் சிறு வயதில் பல படங்கள் பார்த்ததில்லை. கமலின் சில படங்களைப் பார்த்திருந்தால், நான் சினிமாத்துறைக்கே வந்திருக்க மாட்டேன். ஏனென்றால், அவரது பங்களிப்பு அபாரமானது. கமல் சினிமாவை விரும்புகிறார். ரசிகர்களை அவர் லேசாக எடுத்துக்கொண்டது கிடையாது. இப்போது அரசியலுக்காக சினிமாவை விட்டுவிட்டார். கண்டிப்பாகப் பொதுமக்களை அவர் ஏமாற்ற மாட்டார் என்று எனக்குத் தெரியும்.
அவரது அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யம் என்ற பெயரும், ஒற்றுமையைக் குறிக்கும் அதன் சின்னமும் எனக்குப் பிடித்திருக்கிறது.”
இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.