தமிழ் சினிமா

‘தளபதி 64’ க்ளைமாக்ஸில் என்ன ஆயுதம் வரும்?- இயக்குநர் ரத்னகுமார் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

‘தளபதி 64’ படத்தின் அப்டேட் கேட்டு லோகேஷ் கனகராஜிடம் வேண்டுகோள் வைத்துள்ளார் ரத்னகுமார்.

கார்த்தி நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு கடந்த மாதம் 25-ம் தேதி ரிலீஸான படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தில், நரேன், ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ், தீனா, ஹரீஷ் உத்தமன், ஹரீஷ் பெராடி, வத்சன் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்தார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் எடிட் செய்தார். ஆக்‌ஷன் த்ரில்லர் வகையைச் சார்ந்த இந்தப் படத்தின் கதை, ஒரே இரவில் நடப்பதாக அமைந்திருந்தது.

‘கைதி’ வெளியாகி நேற்றுடன் (நவம்பர் 18) 25 நாட்கள் ஆகின்றன. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள லோகேஷ் கனகராஜ், “ ‘கைதி’ வெற்றிகரமாக 25-வது நாள். இதை சாத்தியமாக்கிய மக்களுக்கும், ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி. அப்படியே அந்தக் கொசு மருந்து அடிச்ச மிஷினுக்கும் ஒரு குட்டி நன்றி” என நகைச்சுவையுடன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர்கள் ரத்னகுமார், லோகேஷ் கனகராஜ்

அதை ரீட்வீட் செய்துள்ள ‘மேயாத மான்’ மற்றும் ‘ஆடை’ படங்களின் இயக்குநர் ரத்னகுமார், “அப்படியே ‘தளபதி 64’ க்ளைமாக்ஸில் என்ன ஆயுதம் வரப்போகுதுன்னு சொன்னீங்கனா நல்லா இருக்கும்” என நகைச்சுவையாக வேண்டுகோள் வைத்துள்ளார்.

அவரின் இந்த வேண்டுகோளுக்கு, நெட்டிசன்கள் விதவிதமாகப் பதில் அளித்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் ‘தளபதி 64’ படத்தில், விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மாளவிகா மோகனன், ஆண்டரி வர்கீஸ், சாந்தனு, ஆண்ட்ரியா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், விஜே ரம்யா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT