தனுஷை மையமாக வைத்து என் படத்தின் கதையை எழுதவில்லை என இயக்குநர் சஞ்சய் பாரதி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி. சில படங்களில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘தனுசு ராசி நேயர்களே’. ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு, ஜிப்ரான் இசையமைக்கிறார்.
ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிக்க, ரெபா மோனிகா ஜான் மற்றும் டிகங்கனா சூர்யவன்சி இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராசியை நம்பும் ஹீரோ, அதற்கேற்றவாறு கல்யாணத்துக்குப் பெண் தேடுவதுதான் கதை.
“குடும்பத்தோடு பார்க்கக்கூடிய காமெடிப் படமாக இது இருக்கும். இந்தக் கதையை, தனுஷை மையமாக வைத்து எழுதவில்லை. எதிர்வீட்டுப் பையன் மாதிரி இருக்கும் ஹரிஷைத்தான் முதலில் அணுகினோம். அந்தக்கால கார்த்திக்கை நினைவுபடுத்தும் வகையில் அவர் இருக்கிறார்.
இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு ‘அடல்ட் காமெடி’ என்கிறார்கள். நிச்சயம் இது அந்த மாதிரி படம் கிடையாது. ஒரு ஹீரோயினுக்கு கே.ஆர்.விஜயா எனப் பெயர் வைத்துள்ளோம். ஏன் அந்தப் பெயரை வைத்தோம் என படம் பார்க்கும்போது உங்களுக்குப் புரியும்” என்றார் சஞ்சய் பாரதி.
படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது படக்குழு. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.