‘மாஃபியா’ படத்தில் ஆர்யன் எனும் கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘துருவங்கள் 16’ மற்றும் ‘நரகாசூரன்’ படங்களைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘மாஃபியா’. அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் ப்ரியா பவானி சங்கர் ஹீரோயினாகவும், பிரசன்னா வில்லனாகவும் நடித்துள்ளனர்.
கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஜாக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். ஒரே கட்டமாக இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இயக்குநருக்கு டெங்கு காய்ச்சல் வந்தபோதும்கூட படப்பிடிப்பை நிறுத்தாமல், தொடர்ந்து படம் பிடித்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான இந்தப் படத்தின் டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே, அடுத்த மாதம் (டிசம்பர்) படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 20-ம் தேதி வெளியிடுவதற்கான வேலைகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், ஆர்யன் எனும் கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்திருப்பதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று (நவம்பர் 19) அருண் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
“இதுவரை வெளியான என் சிறந்த படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஆச்சர்யங்களை எதிர்பாருங்கள்” என நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார் அருண் விஜய்.
‘மாஃபியா’ படத்தைத் தொடர்ந்து ‘அக்னிச் சிறகுகள்’, ‘பாக்ஸர்’, ‘சினம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அருண் விஜய்.