கொசு மருந்து அடிச்ச மிஷினுக்கும் குட்டி நன்றி என நகைச்சுவையுடன் தெரிவித்துள்ளார் ‘கைதி’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
கார்த்தி நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு கடந்த மாதம் 25-ம் தேதி ரிலீஸான படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தில், நரேன், ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ், தீனா, ஹரீஷ் உத்தமன், ஹரீஷ் பெராடி, வத்சன் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்தார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் எடிட் செய்தார். ஆக்ஷன் த்ரில்லர் வகையைச் சார்ந்த இந்தப் படத்தின் கதை, ஒரே இரவில் நடப்பதாக அமைந்திருந்தது.
விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது இந்தப் படம். ஹீரோயின், பாடல்கள் என கமர்ஷியல் அம்சங்கள் பெரிதாக இல்லாமல், திரைக்கதையின் மூலம் பார்வையாளனை இரண்டு மணி நேரம் இருக்கையோடு கட்டிப்போட முடியும் என்பதை நிரூபித்தார் லோகேஷ் கனகராஜ்.
படம் வெளியான ஓரிரு நாட்களில், திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. எனவே, வசூலும் அதிகமாகக் கிடைத்தது. 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், 111 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘கைதி’ வெளியாகி நேற்றுடன் (நவம்பர் 18) 25 நாட்கள் ஆகின்றன. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள லோகேஷ் கனகராஜ், “ ‘கைதி’ வெற்றிகரமாக 25-வது நாள். இதை சாத்தியமாக்கிய மக்களுக்கும், ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி. அப்படியே அந்தக் கொசு மருந்து அடிச்ச மிஷினுக்கும் ஒரு குட்டி நன்றி” என நகைச்சுவையுடன் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து ‘தளபதி 64’ படத்தை இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தில், மாளவிகா மோகனன், ஆண்டரி வர்கீஸ், சாந்தனு, ஆண்ட்ரியா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், விஜே ரம்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.