தமிழ் சினிமா

கமல் போன்ற அற்புத நடிகர்; 60 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான்: இயக்குநர் ஷங்கர் புகழாரம்

செய்திப்பிரிவு

கமல்ஹாசன் போன்ற அற்புதமான நடிகர்கள் 60 வருடங்களுக்கு ஒரு முறைதான் பிறப்பார்கள் என்று இயக்குநர் ஷங்கர் புகழாரம் சூட்டினார்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக கமல்ஹாசன் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகள் ஆகின்றன. இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டன. இதில் 'கமல் 60' என்ற தலைப்பில் 'உங்கள் நான்' என்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சி சென்னையில் நேற்று (நவம்பர் 17) நடைபெற்றது. இதற்காக தமிழ்த் திரையுலகினர் பலரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதில் ரஜினி, இயக்குநர் ஷங்கர், இயக்குநர் மணிரத்னம், விஜய் சேதுபதி, கார்த்தி, வடிவேலு, ஜெயம் ரவி, தமன்னா, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், மனிஷா கொய்ராலா, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், இயக்குநர் சேரன், இயக்குநர் அமீர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த விழா மேடையில் இயக்குநர் ஷங்கரை ஆக்‌ஷன் சொல்லச் சொன்னார்கள். உடனே கமல்ஹாசன் ’இந்தியன் 2’ படத்திலிருந்து ஒரு வசனத்தைப் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். "முதல் பாகத்திலிருந்து வசனம் பேச வேண்டுமா அல்லது இரண்டாம் பாகத்திலிருந்தா என்று ஷங்கர் என்னிடம் சொல்லவில்லை. சமீபத்தில் 'இந்தியன் 2' படத்தில் நடித்திருப்பதால் இந்த வசனத்தைச் சொன்னேன்" என்றார் கமல்.

'இந்தியன்' படத்தில் கமல்

அதனைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் பேசும் போது, "கமல் சார் தமிழ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம், இந்தி, தெலுங்கு மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளைத் தனது நடிப்பு வாழ்க்கையில் பேசியுள்ளார். முதல் முறையாக 'இந்தியன் 2' படத்தில் அவர் குஜராத்தி மொழி பேசுகிறார். அதற்கு ஒரு எடுத்துக்காட்டு இது. படத்தில் உங்களுக்கென பல ஆச்சரியங்கள் உள்ளன.

நான் எடுத்ததில் சிறந்த படம் ’இந்தியன்’ தான் என பலரும் இதுவரை என்னிடம் கூறி வருகின்றனர். தற்போது, 20 வருடங்கள் கழித்தும், கமல் சார் சேனாபதி கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடிக்கிறார். தனது மொத்த உடல், படப்பிடிப்புத் தளம், கிராபிக்ஸ், கேமரா கோணம் என எல்லாத்தையும் உள்வாங்கிக்கொண்டு 360 டிகிரி நடிப்பைத் தருகிறார்.

5 வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் கேமராவை வைத்தாலும் கூட அவரால் அதற்கு ஏற்றார் போல சரியாக நடிக்க முடியும். குறிஞ்சிப் பூ 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும். அத்தி வரதர் 40 வருடங்களுக்கு ஒரு முறை வெளியே வருவார். கமல்ஹாசன் போன்ற அற்புதமான நடிகர்கள் 60 வருடங்களுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள்” என்று பேசினார் இயக்குநர் ஷங்கர்.

SCROLL FOR NEXT