திரையுலகில் நுழைந்து 16 ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழ்த் திரையுலகுக்கு வந்து 14 ஆண்டுகள் ஓடிவிட்டன. வழக்கமான கதாநாயகி கதாபாத்திரங்களில்தான் தன் சினிமா பயணத்தை நயன்தாரா ஆரம்பித்தார் என்றாலும், இடையில் கவர்ச்சிப் பதுமையாக வந்து போனாலும், பிறகு தன் அனுபவங்கள் மூலமாக, கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் தன்னுடைய தவறுகளை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டு நாயகியை மையப்படுத்திய கதைகளில் நடித்து வருகிறார் நயன்தாரா.
இது தாமதமான மனமாற்றம்தான் என்றாலும், ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் சினிமாவில், குறிப்பாக தமிழ் சினிமாவில் பெண் மையக் கதாபாத்திரங்களே அற்றுப்போயிருந்த காலத்தில், நயன்தாராவின் திரைப்படங்கள் பெண் மைய சினிமா ட்ரெண்டை மீண்டும் தொடங்கி வைத்தது எனலாம். 'கிளாமர் டால்' என்ற அடைமொழியிலிருந்து 'லேடி சூப்பர் ஸ்டார்' என்ற புகழ் கிடைத்தது வரை நயன்தாராவின் பயணம் நெடியது. 'இனி அவ்வளவுதான்' எனப் பலரும் கணித்தபோது, மீண்டும் எழுந்து மிக அழுத்தமான திரைப்படங்களைக் கொடுக்க ஆரம்பித்தார் நயன்தாரா.
2003-ம் ஆண்டு 'மனசினக்கரே' என்ற மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமான நயன்தாரா, 2005-ல் 'ஐயா' திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, 'சந்திரமுகி', 'கஜினி', 'வல்லவன்', 'கள்வனின் காதலி', 'வில்லு’ என கதாநாயகர்களுடன் காதல் செய்வது, டூயட் ஆடுவது, கவர்ச்சியான காட்சிகளில் நடிப்பது என்றுதான் தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே கவனமானார் நயன்தாரா. அந்த சமயத்தில் நயன்தாரா தனித்துத் தெரியாமல் மற்ற நடிகைகளுடன் ஒருவராகவே கருதப்பட்டார். இருந்தாலும், தமிழ் சினிமாவில் பெரு வெற்றியை அடைந்த திரைப்படங்கள் மூலமாகவும், ரஜினிகாந்த், அஜித், விஜய் என முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலமாகவும் தமிழ் சினிமாவில் தன் இருப்பை நிலைநிறுத்திக்கொண்டார்.
பல வெற்றிப் படங்களின் நாயகியான நயன்தாரா, தன் தனிப்பட்ட உறவுச் சிக்கல்கள் காரணமாக சிறிய இடைவெளி எடுக்க வேண்டியிருந்தது. தனிப்பட்ட உறவுகளுக்காக ஊடகங்கள், பொதுவெளி என பல தளங்களில் நயன்தாரா கேள்விக்கு உட்படுத்தப்பட்டார். சினிமா வாழ்க்கையில் இத்தகைய விமர்சனங்களை சந்திக்காத நாயகிகள் இல்லை என்றாலும், ஒப்பீட்டளவில் மிக அதிகமான விமர்சனங்களை எதிர்கொண்டார் நயன்தாரா. 2011-ம் ஆண்டு கிட்டத்தட்ட ஓராண்டு காலம் திரையுலகில் இருந்து விலகியிருந்த நயன்தாரா, சமீபத்தில் 'வோக்' ஃபேஷன் இதழுக்கு தான் ஒதுங்கியிருந்த தனிமையான காலத்தைப் பற்றி பகிர்ந்திருக்கிறார். "நான் தனிமையான வெளியில் இருந்தேன். என் திரைப்படங்கள், பாடல்களை அப்போது நான் பார்க்கவில்லை," என்றார்.
நயன்தாராவின் இந்த இடைவெளிக் காலமே, திரைக்கதையில் நம்பிக்கை வைத்து அவர் படங்களில் நடிப்பதற்குண்டான உறுதியைக் கொடுத்திருக்க வேண்டும். என்ன கதாபாத்திரம், படத்தின் கதை என்ன என்பதை முழுவதும் தெரிந்துகொண்டு நயன்தாரா நடிக்கத் தொடங்கியது இதற்குப் பிறகுதான். சினிமா உலகத்தை மட்டுமல்ல, தன் தனிப்பட்ட வாழ்க்கையில் சந்திக்கும் விமர்சனங்களைக் கூட அதற்குப் பிறகுதான் நயன்தாரா பொதுவெளியில் எதிர்கொள்ள ஆரம்பித்தார்.
ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு, 2013-ல் 'ராஜா ராணி' திரைப்படம் மூலம் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார் நயன்தாரா. முன்னணிக் கதாநாயகிகள் நடிக்கத் தயங்கும் பாத்திரங்களை ஏற்கத் தொடங்கினார்.
முன்னணிக் கதாநாயகர்களை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்கள், பொருளாதார ரீதியில் அடையும் வெற்றி, நாயகி மையத் திரைப்படங்களுக்கு அவ்வளவாக கிடைப்பதில்லை என்ற யதார்த்தம் தான், நாயகிகளை அவ்வாறான கதைகளை தேர்ந்தெடுப்பதில் தயங்க வைக்கிறது. இந்த நிலைமை இன்னும் மோசமாகத்தான் இருக்கிறது என்றாலும், மாறி வருகிறது எனலாம். நாயகி மைய சினிமாவைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் மற்றொரு நடிகையான டாப்ஸி பொதுத்தளத்திலேயே இதுகுறித்துப் பேசியுள்ளார். பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களை தியேட்டர் உரிமையாளர்கள் வாங்குவது முதல் நடிகைகளுக்கான சம்பளம் வரை, கதாநாயகர்களுடன் ஒப்பிட முடியாத அளவுக்கே உள்ளது என்பதை டாப்ஸி திரையுலகில் இருந்தே அதனை ஒப்புக்கொண்டுள்ளார்.
இத்தகைய பெண் மைய திரைப்படங்களின் ஒட்டுமொத்த பட்ஜெட்டும், முன்னணி கதாநாயகர்களின் சம்பளமும் சமமாக இருக்கிறது என டாப்ஸி தொடர்ந்து கூறிவருகிறார். ஜோதிகாவும் இதுகுறித்துப் பேசுகிறார். தமிழ் சினிமாவில் இத்தகைய குரல்கள் அதிகமாக இன்னும் எழவில்லை. எனினும், இதுகுறித்துப் பேசாமலேயே பெண் மைய சினிமாக்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நயன்தாரா.
'ராஜா ராணி'க்குப் பிறகு, நயன்தாரா நடித்த 'மாயா', 'நானும் ரவுடிதான்', 'டோரா', 'அறம்', 'கோலமாவு கோகிலா', 'இமைக்கா நொடிகள்', 'ஐரா', 'கொலையுதிர் காலம்' என, தன்னைச் சுற்றியே நகரும் கதைகளில் கவனம் செலுத்தி, வேறொரு பார்வையில் தன்னை அணுக வைத்தவர் நயன்தாரா. இவற்றில் பல திரைப்படங்கள் 'மெகா ஹிட்' ரகம் இல்லை என்றாலும், கதைகளை நம்பி நடித்ததால் இத்திரைப்படங்கள் நயன்தாராவுக்குத் திரையுலகில் மட்டுமல்லாமல் ரசிகர்களிடையேயும் நன்மதிப்பை பெற்றுத்தந்தது.
2016-ல் நயன்தாரா மலையாளத்தில் மம்மூட்டியுடன் இணைந்து நடித்த திரைப்படம், 'புதிய நியமம்'. இத்திரைப்படத்தில், தான் இரு நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில், அதனைத் தன் கணவரிடம் சொல்ல முடியாமல் பயந்து, பின் அதிலிருந்து எப்படி போராடி வெளியில் வருகிறார் என்பதை தன் திறமையான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருப்பார்.
வாசுகி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நயன்தாரா. தன் மனைவிக்கே தெரியாமல், பாலியல் வன்கொடுமை செய்தவர்களை அவர் கொலை செய்வதற்கு கணவர் கதாபாத்திரம் உதவுவது போன்ற கதை. ஆண் மையத்திலிருந்தே படத்தின் பல பகுதிகள் நகர்ந்தாலும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவர்களின் உள்ளுணர்வு, பயம் உள்ளிட்டவற்றை உணர்த்தும் வெகுசில திரைப்படங்களில் 'புதிய நியமம்' ஒன்றாகும்.
'இது நம்ம ஆளு' திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்திருப்பார் நயன்தாரா. தன் திரைத்தொழில் வேறு, தனிப்பட்ட அனுபவங்கள் வேறு என்பதை முழுமையாகப் புரிந்துகொண்ட நடிகைகள் மட்டுமே, கடந்த கால நிகழ்வுகளை மறந்துவிட்டு அதனுடன் தொடர்புடைய நடிகருடன் இணைந்து நடிக்க முடியும். காதல் உறவில் கசப்பு ஏற்பட்ட உடனேயே தனிமைப்படாமல், துணிந்து சிம்புவுடனேயே நடித்தார் நயன்தாரா. அவருடைய இந்த முதிர்ச்சியான போக்குதான், கடந்த காலத்தில் அவர் மீதான விமர்சனங்களுக்குப் பதில்.
'விஸ்வாசம்' திரைப்படத்தில் கணவரை விட்டுப் பிரிந்து வாழும் பெண்ணுக்கு உண்டான பொதுப்புத்தியிலிருந்து விலகி, தன்னை விட்டுக்கொடுக்காத பெண்ணாக கதை முழுவதும் பயணித்திருப்பார்.
'கோலமாவு கோகிலா' திரைப்படத்தில் நயன்தாரா
படம் முழுக்கவே இரண்டு புடவைகளை மட்டுமே காஸ்டியூமாகக் கொண்டு நடித்த 'அறம்' திரைப்படத்தில், 'மாஸ்' திரைப்படங்களில் நாயகர்கள் பேசாத அரசியலை நயன்தாரா பேசியபோது, தமிழ் சினிமாவை உற்று நோக்குபவர்கள் ஆச்சர்யப்பட்டனர்.
முழுக்க முழுக்க பெண் மைய சினிமாவில் தான் நயன்தாரா நடிக்கிறாரா என்றால், இல்லை என்பதே வருந்தத்தக்க பதிலாக இருக்கிறது. இடையிடையே, 'வேலைக்காரன்', 'மிஸ்டர் லோக்கல்', 'பிகில்’ என கதாநாயகர்களை மையப்படுத்திய சினிமாக்களிலும் தலைகாட்டுகிறார் நயன்தாரா. ஆனால், அவருக்கு முக்கியத்துவமே இல்லாத திரைப்படங்களில் நயன்தாரா நடிக்கும்போது ரசிகர்கள் அவரைக் கேள்வி கேட்கின்றனர். மற்ற நடிகைகள் அவ்வாறான கதாபாத்திரங்களில் நடிக்கும் போது எழாத கேள்விகள் நயன்தாராவுக்கு எழுகிறது. "நயன்தாரா ஏன் இந்த மாதிரி திரைப்படங்களில் எல்லாம் நடிக்கிறார்?" என்று கேட்கின்றனர். அவருக்கு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்களில் நயன்தாரா நடிப்பதை ரசிகர்கள் ஏற்பதில்லை.
'மிஸ்டர் லோக்கல்' போன்று 'ஸ்டாக்கிங்' செய்யும் கதாநாயகர் திரைப்படத்தில் நயன்தாரா நடித்தபோது விமர்சனங்களை எதிர்கொண்டார். அத்தகைய விமர்சனங்களே அவருக்கான பொறுப்பை அதிகரித்திருக்கிறது. மீண்டும் அவ்வாறான கதாபாத்திரங்களில் நடிக்கக் கூடாது என்ற முடிவை அவர் எடுக்க உதவுகிறது. 'கஜினி' திரைப்படத்தில் தான் நடித்திருக்கக் கூடாது என ஒப்புக்கொள்ளும் அளவுக்கு தன் மீதான தவறுகளை நயன்தாரா திருத்திக்கொள்கிறார், திருத்திக்கொண்டே இருக்கிறார்.
கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் நயன்தாரா எப்படி தன்னை அனுபவம் மூலமாக வளர்த்தெடுத்திருக்கிறார், அவர் ஏன் ஊடகங்களில் தலை காட்டாமல் அமைதியாகவே இருக்கிறார் என்பதற்கு, சமீபத்தில் 'வோக்' இதழுக்கு அளித்த பேட்டியில் தெளிவாக விளக்கியிருக்கிறார் நயன்தாரா. அதன் முக்கிய அம்சங்களை இங்கே தருவது, அவர் ஏன் 'லேடி சூப்பர் ஸ்டார்' என அழைக்கப்படுகிறார் என்ற கேள்விக்கு விடையாக இருக்கும்.
"என்னை மட்டுமே மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு நான்தான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறேன். சில சமயங்களில், அம்மாதிரியான கதைகளில் கணவர், காதலர் கதாபாத்திரங்களைச் சுற்றி நடப்பது போன்று இயக்குநர்கள் சொல்வார்கள். நான் அவர்களிடம் "இது அவசியமா?" எனக் கேட்பேன்.
வெற்றியை என் தலைக்கு ஏற்றிக்கொள்ள மாட்டேன். இன்னும் கேட்டால், சிறந்த படங்களை நான் வழங்க மாட்டேனோ என்கிற பயத்தில் தான் நான் எப்போதும் வாழ்கிறேன்.
சினிமாவுக்கு நுழைந்த ஆரம்பகாலத்தில் சினிமா, கதை குறித்து எதுவும் தெரியாது. என் பெற்றோர் என்னை சினிமாவுக்கு அழைத்துச் செல்ல மாட்டார்கள். நண்பர்களுடன் தான் திரைப்படங்களுக்குச் செல்வேன். திரைப்படங்களைத் தேர்ந்தெடுப்பதில் மோசமான தேர்வுகள், தோல்விகள் மூலம்தான் கற்றுக்கொண்டிருக்கிறேன். எனக்கு எது வெற்றியடையும் எனத் தெரியாது. ஆனால், எது தோல்வியடையும் என எனக்கு இப்போது தெரியும்" என்று தெரிவித்திருக்கிறார் நயன்தாரா.
நாயகர்களுக்கு கவர்ச்சி உறுதுணையாக திரைப்படங்களில் நடிப்பது குறித்து நயன்தாராவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, "சில சமயங்களில் உங்களுக்கு ஆப்ஷன் இல்லாமல் போய்விடும். எத்தனை முறை வேண்டாம் என சொல்வீர்கள்? நான் அபாயங்களை நேரிட உந்தப்படுகிறேன்," என அம்மாதிரியான கதாபாத்திரங்களை 'வேண்டாம்' என சொல்ல முடியாததற்கான காரணத்தைக் கூறுகிறார் நயன்தாரா.
கடந்த சில ஆண்டுகளில் ஊடகங்களுக்கு எந்தப் பேட்டியும் அளிக்காமல் அமைதியாக இருப்பது குறித்து நயன்தாரா, "நான் என்ன நினைக்கிறேன் என்பது குறித்து இந்த உலகுக்குச் சொல்லத் தேவையில்லை. நான் மிகவும் தனிமையான வெளியில் இயங்குபவள். கூட்டங்களில் நான் நன்றாக இருப்பதில்லை. நான் பெரும்பாலான நேரங்களில் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறேன், தவறாக மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறேன். என் வேலை நடிப்பது. என் திரைப்படங்கள் பேசும்," என ஊடகங்கள் மீதான மனக்குறையை வெளிப்படுத்தியிருக்கிறார் நயன்தாரா.
நடிகர் ராதாரவி, தன்னை விமர்சித்த போது துணிச்சலாக பதிலடி கொடுத்தார் நயன்தாரா. இப்படி சினிமாவுலகில் நிலவும் ஆணாதிக்கம் குறித்து, "ஏன் எப்போதும், ஆண்கள் மட்டுமே எல்லா அதிகாரங்களையும் கொண்டிருக்கின்றனர்?" என கேள்வி எழுப்பியிருக்கும் நயன்தாரா, தனக்கு இடர் ஏற்படும்போது மட்டுமல்லாமல், சினிமா உலகின் பாலின சமத்துவமின்மையை தொடர்ச்சியாக கேள்வி கேட்க வேண்டும் என்பது பலரது விருப்பம்.
'பல சர்ச்சைகளுக்குள் சிக்கினால், சினிமாவிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டு விடுவார்கள்', 'நாயகி மைய சினிமாக்களில் நடித்தால் டாப் ஹீரோக்களுடன் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிட்டாது', 'கிளாமரஸ்' கதாபாத்திரங்களில் நடித்தால் ஆழமான கதைகளுடைய திரைப்படங்களில் நடிக்க முடியாது என்பது போன்ற தமிழ் சினிமாவில் நாயகிகளுக்கென கட்டமைக்கப்பட்டிருக்கும் பல்வேறு பிம்பங்களை உடைத்தெறிந்து, 'லேடி சூப்பர் ஸ்டாராக' பரிணமித்திருக்கும் நயன்தாராவுக்கு, பிறந்த நாள் வாழ்த்துகள்.
தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in