நான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன் என்று சென்னையில் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும் போது ஸ்ரீரெட்டி தெரிவித்தார்.
தெலுங்கு திரையுலகில் படவாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று புகைப்பட ஆதாரத்தை வெளியிட்டு பெரும் சர்ச்சையை உருவாக்கியவர் ஸ்ரீரெட்டி. அதனைத் தொடர்ந்து தமிழ் திரையுலகில் விஷால், லாரன்ஸ் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனால் இங்கும் பெரும் சர்ச்சை உருவானது.
தற்போது சென்னையிலேயே தங்கி, சில படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீரெட்டி. அவ்வப்போது தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, உதயநிதியைப் பற்றி இவர் வெளியிட்ட பதிவு என்று, அவரது ஃபேஸ்புக் பதிவு புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. இதனால், அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பு உண்டானது.
இது தொடர்பாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஸ்ரீரெட்டி. அப்போது தான் அரசியலுக்கு வரவுள்ளதையும் உறுதிச் செய்தார். இது தொடர்பாக ஸ்ரீரெட்டி, " நான் நல்லவள் கிடையாது. தவறுகள் செய்துள்ளேன். அதை மறந்துவிட்டு புது வாழ்க்கையைத் தொடங்கப் போகிறேன். உங்கள் வீட்டுப் பொண்ணாக நினைத்து மறந்து மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள்.
சினிமாவில் பெரிய இடத்தைத் தொட ஆசை. அதுக்குத் தான் இவ்வளவு போராட்டமும். சில படங்களில் நடித்து வருகிறேன். இனிமேல் முழு வாழ்க்கையும் சென்னையில் தான். என்னைச் சிலர் அரசியலுக்கு அழைத்துள்ளனர். நானும் அரசியலுக்கு வரலாம் என்று ஆசைப்படுகிறேன். அது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும். எந்தக் கட்சி என்பது மட்டும் சஸ்பென்ஸ். ஆந்திராவில் எம்.பி சீட் தருவதாகச் சொன்னார்கள்.
ஆனால், அங்கு அரசியல் செய்ய நான் விரும்பவில்லை. அரசியலுக்கு வந்தாலும் கூட யாராவது தவறாக நடந்தால் அதையும் பயமின்றி வெளிப்படுத்துவேன்" என்று பேசினார் ஸ்ரீரெட்டி.